ஜி20 மாநாட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது உடல்நடுக்கத்துடன் காணப்பட்ட நிலையில், ஜி20 மாநாட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மேயரை நேற்றைய தினம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சந்தித்தார். பிராங்க்-வால்டர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த மெர்க்கலின் கைகள் நடுக்கத்துடன் காணப்பட்டது.

அதனை அவர் தடுக்க முயற்சித்த வீடியோவும் வெளியானது. அதனைத் தொடர்ந்து, தைராய்டு மற்றும் குறைந்த ரத்த சர்க்கரை நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் ஊகித்தனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் 2 நாட்கள் ஜி20 மாநாட்டில் மெர்க்கல் கலந்துகொண்டுள்ளார். அவர் எந்த வித பிரச்சனையும் இன்றி மாநாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DPA

மெர்க்கல் எந்தவித பிரச்சனையும் இன்றி நல்லபடியாக இருப்பதாக ஜேர்மனின் அரசு தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 65வது வயதை எட்டப் போகிறார் ஏஞ்சலா மெர்க்கல். எனினும் அவர் அடுத்து வரும் எந்தவொரு அரசுசார் நிகழ்ச்சியையும் புறக்கணிக்க மாட்டார் என்று அரசு தொடர்பாளர் ஸ்டெஃபென் செய்பெர்ட் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாட்டுடன் ஏராளமான இருதரப்பு சந்திப்புகளிலும் மெர்க்கல் பங்கேற்க உள்ளார். அத்துடன், ஞாயிற்றுக்கிழமை ஒசாகா நகரில் இருந்து நேராக ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு அவர் செல்ல உள்ளார்.

ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகவும், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணியாகவும் புகழப்படும் மெர்க்கல், 2021ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலை விட்டு விலகுவதாக முன்னர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்