தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை கொல்வதற்காக அவரை துப்பாக்கியால் சுட்ட ஜேர்மானியர் தன்னையும் சுட்டுக் கொண்ட நிலையில், அந்த கருப்பினத்தவர் உயிர் பிழைக்க, ஜேர்மானியர் உயிரிழந்த சம்பவம் மத்திய ஜேர்மனியில் நடந்தேறியுள்ளது.
எரித்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே காரில் வந்த ஜேர்மானியர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
வெறும் தோலின் நிறத்தின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக ஃப்ராங்க்பர்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் 55 வயதுடைய நபர் ஒருவர் தலையில் துப்பாக்கி குண்டுக் காயத்துடன் இறந்து கிடப்பதை பொலிசார் கண்டனர்.
அவரது வீட்டிலிருந்தும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட நிலையில், அவர்தான் அந்த எரித்ரிய நாட்டவரை சுட்டவர் என்றும், அவர் தன்னைத்தான் சுட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகின்றனர்.
இது ஒரு இனவெறித்தாக்குதலாக பார்க்கப்பட்டாலும், வலது சாரியினரின் தொடர்பு இருக்கலாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், துப்பாக்கியால் சுடப்பட்ட எரித்ரிய நாட்டவர், தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் துப்பாக்கியால் சுட்டவரின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதில் என்ன இருக்கிறது என்பது போன்ற விடயங்கள் வெளியிடப்படவில்லை.