ஒரே பள்ளியில் 100 பேருக்கு காசநோய்: காரணம் புரியாமல் திகைக்கும் அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
162Shares

ஜேர்மனியில் ஒரே பள்ளியில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு காசநோய் (Tuberculosis) தொற்று ஏற்பட்டிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், எதனால் இந்த தொற்று ஏற்பட்டது என்பதை அறியாமல் அவர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

தென் மேற்கு ஜேர்மனியின் Bad Schönborn பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த பள்ளியில் ஏராளமானோருக்கு காசநோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஒரே பள்ளியைச் சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு காசநோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு பேருக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இன்னும் பலருக்கும் இதேபோல் மற்றவர்களை பாதிக்கும் அளவில் நோய்த்தொற்று புதிதாக உருவாகவும் வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஜூலை மாத துவக்கத்தில் Bad Schörnbornஇலுள்ள இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு மற்றவர்களை பாதிக்கும் அளவில் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்தே நோய்த்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

ஒரு பள்ளியிலுள்ள ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் (88%) தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த மாணவர்களுடன் தொடர்பே இல்லாத வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் பல மாணவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்களுக்கும் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவே, குழப்பம் உண்டாயிற்று.

எனவே, எப்படி அந்த நோய்க்கிருமி இவ்வளவு பேருக்கு பரவியது என்பதைக் கண்டறிவதற்காக, சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த பள்ளியின் வகுப்பறைகளில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்