58 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம், மீண்டும் சந்தித்துக்கொண்ட தோழிகள்: கருப்புப் பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சுவர் பெண்கள் என்ற பெயரில் பிரபலமான ஒரு கருப்பு வெள்ளைப்படம், அதே இடத்தில் 58 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்தித்துக்கொண்ட தோழிகள்.

இதில் அப்படியென்ன சிறப்பு இருந்துவிடப்போகிறது?

இருக்கிறது... காரணம் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது பெர்லினில், ஜேர்மனியையே இரண்டாகப் பிரித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டத்தில்.

சமீபத்தில், அந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர், 58 ஆண்டுகளுக்குப்பின்னர்... அந்த நேரத்தில் தோழிகளான Rosemarie Badaczewskiயும் Kriemhild Meyerம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் உயரத்தில்தான் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

1961ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 13ஆம் திகதி துவங்கி, பெர்லின் சுவர் எழுப்பப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

சர்வதேச அளவில் ’Wall Girls’ என்ற பெயரில் பிரபலமான அந்த புகைப்படத்தில் Rosemarie இடது பக்கத்திலும், அதாவது கிழக்கு ஜேர்மனியிலும், Kriemhild வலது பக்கத்திலும், அதாவது மேற்கு ஜேர்மனியிலும் நின்றார்கள். அப்போது இருவருக்கும் 15 வயது.

அந்த புகைப்படத்தில் எனக்கு அருகிலிருக்கும் பொலிசார் நினைத்திருந்தால் என்னை தடுத்திருக்க முடியும் என்கிறார் Badaczewski. அந்த புகைப்படம் பெர்லினின் Johannisthalஇல் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்தைப் பார்ப்போர், அந்த பெண்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டிருப்பார்கள், இருவரும் பிரிந்தபின் அவர்கள் வாழ்வு என்னவாகியிருக்கும் என்று ஆச்சரியப்படுவதுண்டு. பெர்லின் சுவரும் 1989ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

இதற்கிடையில் உண்மையாகவே அந்த பெண்களை தேடலானார்கள் அதிகாரிகள். Badaczewski 1961ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 19ஆம் திகதி சுவரைத்தாண்டி குதித்து Meyerஇன் வீட்டுக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்கியிருக்கிறார்.

அவர் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பியபின் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்ல 58 ஆண்டுகளாக. பின்னர் Badaczewski, Giessenக்கும், Kriemhild சுவிட்சர்லாந்துக்கும் குடிபெயர்ந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் Badaczewski உட்பட சுமார் 5,000 பேர் மேற்கு ஜேர்மனிக்கு தப்பினார்கள்.

இந்த ஆகத்து மாதம் 13ஆம் திகதி, பெர்லின் சுவர் எழுப்பப்பட்டதன் நினைவுகூறும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

1961க்கும் 1989க்கும் இடையில், கிழக்கு ஜேர்மனியிலிருந்து தப்பியோட முயன்ற, சுமார் 1,969 பேர் வரை கொல்லப்பட்டதாக பெர்லின் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உண்மை நிலவரம் அதை விட மிக அதிகம் என்கிறார்கள் வேறு சில குழுக்களைச் சார்ந்தவர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்