ஜேர்மனி ஆஸ்திரியாவை வேவு பார்த்த வழக்கு: கிடப்பில் போட்டது ஆஸ்திரியா!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் உளவுத்துறை அமைப்பான BND, ஆஸ்திரிய அரசியல்வாதிகள், ஆஸ்திரியாவிலுள்ள சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை உளவு பார்த்ததாக நடத்தி வந்த விசாரணையை, கிடப்பில் போட்டுள்ளதாக ஆஸ்திரிய விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பயனுள்ள ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அந்த விசாரணை தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, வியன்னா விசாரணை அலுவலக செய்தி தொடர்பாளரான Nina Bussek தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆஸ்திரிய பத்திரிகைகள் இரண்டு, BND, 1999க்கும் 2006க்கும் இடையில் உளவு பார்த்ததாக கருதப்படும் இலக்குகளின் நீண்ட பட்டியலை வெளியிட்டன.

அந்த பட்டியலில் 2,000 தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள், ஃபாக்ஸ் மற்றும் இமெயில், அமைச்சகங்கள், சர்வதேச அமைப்புகள், தூதரகங்கள் மற்றும் ஆஸ்திரியாவில் செயல்படும் நிறுவனங்களின் முகவரிகள், போன்றவை இடம்பெற்றிருந்தன.

அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிறுவனங்களில், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு, ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பு மற்றும் சர்வதேச அணு ஆற்றல் ஏஜன்சி ஆகியவை முக்கியமாக குறி வைக்கப்பட்ட அமைப்புகளாகும்.

அதிலும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த அமைப்புகள் அனைத்துமே ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் அமைந்துள்ளதுதான்.

அந்த நேரத்தில் இது குறித்து விளக்கமளிக்குமாறு ஆஸ்திரியாவின் அப்போதைய ஜனாதிபதி Alexander Van der Bellen, ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தார்.

இரண்டு நட்பு நாடுகளுக்கிடையில் உளவு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல, அத்துடன் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல என்று ஆஸ்திரிய சேன்ஸலரான Sebastian Kurzம் தெரிவித்திருந்தார்.

என்றாலும், அது தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பதில் ஜேர்மனிக்கு பிரச்சினைகள் இருந்ததால் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை என ஆஸ்திரியாவின் உள்ளூர் உளவுத்துறையான BVTயின் தலைவரான Peter Gridling கூறினார்.

இதற்கிடையில், இந்த விசாரணை முற்றிலும் முடிந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ள வியன்னா விசாரணை அலுவலக செய்தி தொடர்பாளரான Nina Bussek, விசாரணைக்கு புதிய ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமானால் மீண்டும் விசாரணை மீண்டும் தொடரும் என்றும், ஆனால் தற்போதைக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்