ஜேர்மானியர்களின் காதலுக்காக ரோஜா விற்கும் இந்தியர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
340Shares

ஜேர்மானியர்களில் காதலுக்காகவும் அன்புக்காகவும் ஜேர்மனியில் ரோஜாப்பூ விற்கிறார் ஒரு இந்தியர்.

சஞ்சீவ் ஷர்மா (40) புது டில்லியைச் சேர்ந்தவர். ஜேர்மனியின் Cologne நகரிலுள்ள முக்கிய உணவகங்கள் அருகில் அவர் ரோஜாப்பூக்களை விற்கிறார்.

Cologne நகரில் பலருக்கும் ஷர்மாவைத் தெரிந்திருக்கிறது. அவரை பூக்களின் காவலன் என உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள்.

மாலை தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கிறது ஷர்மாவின் பூ வியாபாரம். ஜேர்மனியில், பழமையான பாரம்பரியப்படி ரோஜா வாங்குபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

காதலர்களைப் பொருத்தவரையில், உணவுக்குப்பின்னும், காதலை காட்டுவதற்காகவும் தங்கள் துணைக்கு பூக்களை பரிசளிப்பது பாரம்பரியம்.

புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுபவர்களுக்கும் பூக்கள் அவசியம்.

ஷர்மா, ரோஜா ஒன்றை மூன்று முதல் ஐந்து யூரோக்களுக்கு விற்பனை செய்கிறார்.

இந்த ரோஜாக்கள் ஹாலந்திலிருந்து மொத்தமாக வாங்கி வரப்படுகின்றன. ஆண்டொன்றிற்கு 27,000 ரோஜாக்களை விற்று, அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் யூரோக்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கிறார் ஷர்மா.

தான் பூ விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அரசுக்கு 25,000 யூரோக்கள் வரி செலுத்துவதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

வியாபாரத்திற்கு ஒரே பிரச்னை ரவுடிகளும், குடிகாரர்களும் கொடுக்கும் தொல்லைதான் என்கிறார் ஷர்மா.

1994இல் Cologneக்கு ஒரு அகதியாக வந்த ஷர்மா, தற்போது ஒரு ஜேர்மன் குடிமகன், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ஷர்மா Cologneஇல் நடத்தி வரும் சிறிய உணவகம் ஒன்றை அவரது மனைவியும் மூன்று பணியாளர்களும் கவனித்துக் கொள்கிறார்கள்.

23 ஆண்டுகளாக தான் செய்து வரும் வியாபாரம் இன்னும் தொடரும் என்கிறார் ஷர்மா...

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்