வெளிநாட்டவரையும் புலம்பெயர்ந்தோரையும் வேட்டையாட திட்டமிட்ட ஜேர்மன் வலதுசாரியினர்: வெளியான ஆதாரம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Chemnitz நகரில் 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நடந்த கலவரம் தொடர்பான விசாரணையில், தீவிரவாத எண்ணம் கொண்ட வலதுசாரியினர் வெளிநாட்டவர் போல் தோற்றமளிப்போரையும் புலம்பெயர்ந்தோரையும் வேட்டையாட திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஓராண்டுக்குமுன் இதே காலகட்டத்தில் Chemnitz நகரில் நடந்த கலவரத்தால் ஏஞ்சலா மெர்க்கலின் அரசு கவிழக்கூடிய ஒரு சூழல் உருவானது நினைவிருக்கலாம்.

Chemnitz நகரின் வலதுசாரி தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் ஆகத்து 26க்கும் 28க்கும் இடையில், தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆகத்து மாதம் 26ஆம் திகதி, ஜேர்மானியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 23 வயது சிரிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின்போது, நியோ நாசிக்கள் அங்கு குவிந்ததையும், வெளிநாட்டவர் போல் தோற்றமளிப்போரும் புலம்பெயர்ந்தோரும் தெருக்களில் துரத்தப்பட்டு தாக்கப்பட்டதையும் காண முடிந்தது.

அப்போது, பொலிசார், புலம்பெயர்ந்த பின்னணி கொண்டவர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு எதிராக வலது சாரியினர் வன்முறையை பயன்படுத்த தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான பொலிஸ் அறிக்கை ஒன்றில், தங்களுக்குள் குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொண்ட வலது சாரியினர், வேட்டையாடுதல் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருப்பதிலிருந்து, அவர்கள் எந்த அளவு வன்முறையை பயன்படுத்த தயாராக இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

அதோடு மட்டுமின்றி, தாங்கள் குறிவைத்த புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக வேட்டையாடிவிட்டதாக அதற்குப்பின் அவர்கள் குறுஞ்செய்திகளில் பெருமையடித்துக் கொண்டதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, உண்மையாகவே வெளிநாட்டவர்களும், வெளிநாட்டவர் போல் தோற்றமளிப்போரும் குறிவைத்து தாக்கப்பட்டனரா என்ற விவாதங்களும் எழுந்தன.

அது தொடர்பாக கிடைத்த ஆதாரங்கள் அரசையே ஆட்டம் காணவைத்தன. அப்போது ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை தலைவராக இருந்த Hans-Georg Maassen, அப்படி ஒரு தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று கூறியதோடு, கிடைத்த ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மெர்க்கலின் CDU கட்சி உறுப்பினரான Hans-Georg Maassen எழுப்பிய சந்தேகங்கள் உட்கட்சிப்பூசலை உருவாக்க, அரசு கவிழும் ஒரு சூழல் ஏற்பட்டது.

ஆளுங்கட்சியின் கூட்டணிக்கட்சியான SPD, அவரை அகற்றக்கோரியது. அதனால் ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் Hans Georg Maassen.

தற்போது, பொலிசாரின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அட்டார்னி ஜெனரல் அலுவலகம், Chemnitz நகரில் நடந்த கலவரம் குறித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers