ஸ்பானிஷ் நபர் செய்த செயல்.. ஜேர்மனியில் 130 விமானங்கள் ரத்து!

Report Print Kabilan in ஜேர்மனி

மூனிச்சில் உள்ள விமான நிலையத்தில், ஸ்பானிஷ் நபர் ஒருவர் பாதுகாப்பு கட்டுபாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்ததால், ஜேர்மனியில் 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜேர்மனியின் இரண்டாவது பெரிய விமான நிலையமான மூனிச்சிற்கு, பாங்கொக்கில் இருந்து மாட்ரிட் நகருக்கு செல்ல வேண்டிய விமானம் ஒன்று வந்துள்ளது.

அந்த விமானத்தில் இருந்து அவசரகாலத்தில் வெளியேறும் விமானத்தின் கதவு வழியாக, ஸ்பானிஷ் நபர் ஒருவர் வெளியேறியதுடன், விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை அறிந்த பெடரல் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் துரித நடவடிக்கையில் இறங்கினர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுடன் சர்வதேச விமானங்கள் கையாளப்படும், இரண்டாவது முனையத்தின் 5வது பகுதி மூடப்பட்டது. குறித்த நபர் ஒன்றாவது முனையத்திற்கு பேருந்தில் பயணம் செய்தாரா என்பது ஆரம்பத்தில் தெளிவாக தெரியவில்லை என்பதால், முனையத்தின் சில பகுதிகளும் மூடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், ஒப்பீட்டளவில் குறித்த நபர் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டார். எனவே, விமான நிலையத்தின் சில பகுதிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், தமது நடவடிக்கைகளை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, காலை 1045 மணியளவில் 1வது முனையமும், 11.20 மணிக்கு 2வது முனையமும் திறக்கப்பட்டது.

இதற்கிடையில், மொத்தம் 130 வெளியே செல்லும் மற்றும் உள்ளே வரும் விமானங்கள் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மொத்தம் 1,200 விமானங்கள் வெளியேறவும், தரையிறங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்