ஜேர்மனியில் நோயாளிகளை கொலை செய்ததாக மீண்டும் ஒரு நர்ஸ் கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நோயாளிகள் பலரை கொலை செய்ததாக ஆண் நர்ஸ் ஒருவரை ஜேர்மன் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

சட்ட விதிகளின்படி பெயர் வெளியிடப்படாத B. என்று மட்டும் அறியப்படும் அந்த நபர், ஐந்து கொலைகள் மற்றும் இரண்டு கொலை முயற்சி குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதை Saarbrücken நகரில் உள்ள அரசு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

ஒரு மருத்துவர் போல தன்னைக் காட்டிக்கொண்டு, பிரான்ஸ் எல்லையில் உள்ள Homburgஇல் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் ஒரு நோயாளியை அணுக முயலும்போது அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நேரத்தில் அவர் ஒரு நர்ஸாக ஆறு வாரங்கள் மட்டுமே அந்த மருத்துவமனையில் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்குள், மருந்துகளை மாற்றிக் கொடுத்ததற்காக அவர் மருத்துவமனையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

தற்போது, அந்த 27 வயதுடைய B. என்று மட்டும் அறியப்படும் அந்த ஆண் நர்ஸ், Völklingenஇலுள்ள ஒரு மருத்துவமனையில் பணி செய்தபோது, ஏராளமானோரை கொலை செய்ததாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அது தொடர்பாக ஏழு பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில், அவற்றில் ஆறு உடல்களில் நச்சுப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

B. தற்போது மோசடி குற்றங்களுக்காக மூன்றாண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். இதேபோல் ஜேர்மனியில் Niels Högel என்னும் சீரியல் கில்லரான ஆண் நர்ஸ் தனது கண்காணிப்பில் இருந்த 85 நோயாளிகளை கொலை செய்தது நினைவிருக்கலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers