பட்டப்பகலில் ஜேர்மன் சேன்ஸலர் வீட்டினருகே சுட்டுக் கொல்லப்பட்ட நபர்: பின்னர் என்ன நடந்திருக்கும்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பட்டப்பகலில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் வீட்டின் அருகே ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டின் சேன்ஸலரின் வீட்டின் அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் என்ன ஆகும் எவ்வளவு பரபரப்பாகி இருக்கும்? ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

சுட்டுக் கொல்லப்பட்டவர் Zelimkhan Khangoshvili (40) என்ற செசன்யர் (இனம்). ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்த அவர், இரண்டாம் செசன்ய போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டவர். எனவே ரஷ்யா அவரை ஒரு தீவிரவாதியாக கருதுகிறது.

ஏற்கனவே பல முறை மிரட்டல்களுக்கும், இரண்டு முறை கொலை முயற்சிகளுக்கும் தப்பிய Khangoshvili, ஜேர்மனிக்கு தப்பியோடி, அரசியல் புகலிடம் கோரி அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் வாழ்ந்து வந்தவர்.

அவரை துப்பாக்கியால் சுட்டவர், தனது துப்பாக்கியை பக்கத்திலிருந்த வாய்க்காலில் வீசிய நிலையில் பொலிசாரிடம் சிக்கினார்.

விசாரணையில், அவர் ரஷ்ய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த Vadim Sokolov என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகள் பரபரப்பாக தலைப்புச் செய்திகள் வெளியிட்டன. தங்கள் நாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கொலையாளி, ஒருவரை கொலை செய்தார் என்றால் தலைவர்கள் அதற்கு பயங்கரமாக ரியாக்ட் செய்வார்கள்.

ஜேர்மனியிலும் அதுதான் நடந்திருக்க வேண்டும். ஆனால்... எதுவுமே நடக்கவில்லை.

தலைவர்கள் அசாதாரண மௌனம் காத்தார்கள். ஒருவரும் ஒரு கருத்தும் கூறவில்லை, அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

பெர்லினில் இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு ரஷ்யாவில் இருந்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas, சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை.

அதேபோல் தங்கள் நாட்டில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் கொலை ஒன்றை செய்த பின்னரும், அதற்கு இரண்டே நாட்கள் கழித்து, கிழக்கு ஜேர்மனியிலுள்ள நான்கு மாகாணங்களின் தலைவர்கள், ரஷ்யாவை G7 நாடுகளில் சேர்க்க வேண்டும் என்று கூசாமல் அழைப்பு விடுத்தார்கள்.

சொல்லப்போனால் ஜேர்மானியர்கள் பலரும் அதை ஆதரிக்கிறார்கள். பலரும் ரஷ்யாவுடன் நல்லுறவை கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

எனவே தற்போது நடந்த கொலை அந்த எண்ணங்களை மாற்றுமா? ஜேர்மனியில் இதயத்துக்குள் வந்து நின்று கொலை செய்தாலும் சரி, ரஷ்ய ரகசிய பொலிசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், தண்டிக்கப்படவும் மாட்டார்கள் என்பதை புடினை விமர்சிக்கும் மேற்கத்திய நாட்டவர்களுக்கு காட்டத்தான் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

ஜேர்மன் மக்கள் ரஷ்யாவின் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை, இந்த கொலை சம்பவம் மாற்றும் என்று நம்புவதாக தெரிவிக்கிறார் அவர். ஆனால் அரசியல் கட்சிகள்? கொலை மோசமானதுதான், அதுவும் உங்கள் நாட்டின் மையத்தில் வந்து நின்றுகொண்டு, சாட்சிகள் கண்களின் முன்னலேயே கொலை செய்வது பயங்கரமானதுதான்... ஆனால் இப்படி ஒரு விடயம் இரு நாடுகளுக்கும் இடையில் மலர்ந்துள்ள நல்லுறவை ஏன் கெடுக்கவேண்டும் என்றல்லவா எண்ணுகின்றன அவை?

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்