ஜேர்மனியின் மிகப்பெரிய குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம்..! குற்றவாளிகளுக்கு பல ஆண்டுகள் சிறை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Andreas V(56), Mario S(34) ஆகிய இரண்டு நபர்கள் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டனர். அவர்கள் இருவரும் இருபது ஆண்டுகளில் டஜன் கணக்கான குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 3வது சந்தேக நபரான Heiko V உடன் இணைந்து, குற்றவாளிகள் 450 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் 1998 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில், Eichwald முகாமில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அந்த காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் 3 முதல் 14 வயதுடையவர்களாக இருந்தனர். கடந்த 10 வாரங்களாக நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் மற்றும் உறவினர்கள் 12 உட்பட 33 சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை The Detmold பிராந்திய நீதிமன்றம் விசாரித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அதன் பின்னர், இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது Andreas V 13 ஆண்டுகளும், Mario S 12 ஆண்டுகளும் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இவர்களின் தண்டனைக்குப் பிறகு, இருவருமே தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்ட இடமாகும்.

இதற்கிடையில் குற்றவாளிகள் இருவரும், வடக்கு ஜேர்மனியின் ஹானோவரில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Lugde-யின் முகாமில், பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத தொடர்ச்சியான முறைகேடு வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் என்று நம்பப்படுகிறது.

ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் பொலிஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தவறுகளின் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், இந்த வழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட தொடர் துஷ்பிரயோகம் குறித்த சீற்றம் நாடு முழுவதும் பரவியது.

மேலும், ஜேர்மனியில் நடந்த மிகப்பெரிய குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் இது என்று கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்