இலங்கை அகதிகளை சிக்கலுக்குள்ளாக்கிய எட்வர்ட் ஸ்னோடென் ஜேர்மனியில் தஞ்சமடைய விருப்பம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் எட்வர்ட் ஸ்னோடென் என்பவருக்கு உதவ முன்வந்ததால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவிருக்கலாம்.

எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு உதவியதால், ஹொங்கொங்கிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்திலிருந்து அவர்கள் இன்னும் தப்பவில்லை.

அந்த நபர் இப்போது ஜேர்மனியில் தஞ்சம் புக ஆர்வம் காட்டி வருகிறார்.

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென், முக்கிய ரகசியங்களை வெளிப்படுத்தியதால் அமெரிக்கா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

தற்காலிகமாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள எட்வர்ட் ஸ்னோடென், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் இன்னமும் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் புக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி எனக்கு அடைக்கலம் தர முன்வந்தால், அது அமெரிக்காவுக்கு எதிரான செயலாக கருதப்படாது என்றார் அவர்.

தனது வழக்குக்கு ஆதரவாக ஜேர்மனியும் பிரான்சும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை விமர்சித்த ஸ்னோடென், இரண்டு அரசுகளும் நான் வருவதை தடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கின்றன என்றார்.

முன்னர் ஜேர்மனி உட்பட ஏராளமான நாடுகளில் தஞ்சம் கோரியிருந்தார் ஸ்னோடென், ஆனாலும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

இதற்கிடையில், தான் எப்போதாவது உயிரற்றவனாக கண்டுபிடிக்கப்பட்டால், அது நிச்சயமாக தற்கொலையாக இருக்காது என்றார் அவர்.

இது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள ஸ்னோடென், இப்போதைக்கு எனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயமாக இல்லை.

எனவே, எப்போதாவது நான் ஒரு ஜன்னல் வழியாக கீழே விழ நேர்ந்தால், நிச்சயம் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம் என்கிறார் ஸ்னோடென்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்