பெர்லினின் முக்கிய பகுதியில் போக்குவரத்தை முடக்கிய போராட்டக்காரர்கள்!

Report Print Kabilan in ஜேர்மனி

காலநிலை வெப்பமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜேர்மனியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவுச் சட்டத்தில், செப்டம்பர் காலநிலை ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் இடம்பெறவில்லை. அத்துடன் ‘காலநிலை நடுநிலைமை’ என்ற பிணைப்பு இலக்கு மற்றும் ஒரு சக்தி வாய்ந்த நிபுணர்களின் சுயாதீன கமிஷனுக்கான மேற்பார்வை பங்கும் அதில் இல்லை.

இதனால், இடது சாரி பாராளுமன்ற உறுப்பினர் Lorenz Goesta Beutin ‘இது காலநிலை கொள்கைக்கான ஜனநாயக விரோத ஊழல்’ என்று விமர்சனம் செய்தார். அத்துடன், கார்பன் வெளியேற்றத்தை குறைக்க கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் ஒத்த முடிவை உறுதிபடுத்திய நிலையில், 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஜேர்மனி துணிந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

எனினும், புதன்கிழமையன்று மெர்க்கலின் கூட்டணி கட்சியில் கூட இந்த வரைவு சட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும், நாடாளுமன்றத்தில் அமைச்சர்களால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால், கார்பன் வெளியேற்றத்தை அடுத்த ஆண்டுக்குள் 1990 நிலைகளில், 40 சதவிதம் குறைக்கும் நோக்கில் ஜேர்மனி தோல்வியடையும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

AP Photo/Michael Sohn

இதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஒவ்வொரு வாரமும் ‘Fridays for Future’ என்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் பெர்லினில் காலநிலை ஆர்வலர்கள் பலர், புவி வெப்பமடைவதை தடுக்க வேண்டும் என்றும் போக்குவரத்தை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரின் மையத்தில் உள்ள ஒரு பெரிய ரவுண்டானாவை அவர்கள் தடுத்தனர். அதிகாலை 4 மணியளவில் டைகர் கார்டன் பூங்காவில் உள்ள ‘Grober Stern’ சந்திப்பை சுமார் ஆயிரம் பேர் தடுத்ததாக பொலிசார் உறுதிபடுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, புதிய காலநிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்கியதற்காக ‘Extinction Rebellion’ எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசாங்கத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

AFP Photo/Tobias SCHWARZ

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்