ஜேர்மன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் வெளியானது: ஒரு சர்ச்சை வீடியோவும்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் தேவாலயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்களும் அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளன.

நேற்று Halle நகரில் உள்ள யூதர்களுக்கான தேவாலயம் ஒன்றை குறிவைத்து தாக்கிய ஒரு நபர் தனது தாக்குதலை நேரலையில் ஒலிபரப்பியதால் அவரது அடையாளம் தெரியவந்துள்ளது.

அவரது பெயர் Stephan Balliet (27) என்று ஜேர்மன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் யூதர்களின் முக்கிய பண்டிகையான Yom Kippur என்னும் பண்டிகையின்போது நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நேரலையில் 35 நிமிடங்கள் பேசிய Balliet, தன்னல் தேவாலயத்திற்குள் நுழைய முடியாமல் போனதற்காக வருந்தியதுடன், யூத இன அழிப்பு, பெண்கள் உரிமை மற்றும் புலம்பெயர்தல் குறித்து பேசியதோடு, பல்வேறு பிரச்னைகளுக்கும் யூதர்கள்தான் மூல காரணம் என்றும் கூறியுள்ளான்.

இதற்கிடையில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சர், இது வலது சாரி தீவிரவாத எண்ணங்களால் தூண்டப்பட்ட யூதர்களுக்கெதிரான தாக்குதலாக தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

Twitchஇல் வெளியான சர்ச்சைக்குரிய நேரலை வீடியோவை சிறிது நேரத்திற்குள் அமேசான் நிறுவனம் அகற்றிவிட்டது.

Balliet தனது தலைக்கவசத்தில் பொருத்தியிருந்த கமெரா மூலம் ஒளிபரப்பான அந்த வீடியோவில், பூட்டியிருந்த தேவாலயக் கதவுகளை துப்பாக்கியால் சுட்டு திறக்க அவர் முயலும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

பின்னர் காரிலிருந்த வெடிகுண்டு ஒன்றை எடுத்து வந்த Balliet, அதை கதவில் பொருத்தி வெடிக்கச்செய்யும் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

இதைக் கண்ட ஒரு பெண், இது உண்மையாகவே அவசியம்தானா என்று அவரைக் கேட்க, உடனடியாக அந்த பெண்ணை சுட்டுக்கொன்றுள்ளார் Balliet.

தேவாலயக் கதவுகளை திறக்கும் முயற்சி தோல்வி அடையவே, அருகிலுள்ள கபாப் கடை ஒன்றிற்கு சென்று அங்கிருந்தவர்களை Balliet சுட, மேலும் ஒருவர் துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகியுள்ளார்.

தனது முயற்சிகள் வெற்றி பெறாததால் தன்னைத்தானே 'loser' என்று திட்டியவாறே டாக்சி ஒன்றின் சாரதியை சுட்டு, அந்த டாக்சியை கடத்தி அங்கிருந்து தப்பியுள்ளார் Balliet.

இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிசார் முதலில் கருதியதால், மக்கள் பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு முதலில் அறிவுறுத்தப்பட்டது.

Werschen என்ற இடத்திலிருந்து 40 மைல்கள் பயணித்த நிலையில் Balliet சென்ற டாக்சி, லொறி ஒன்றுடன் மோத, பொலிசார் அவரை கைது செய்தனர்.

தற்போது தாக்குதலில் ஈடுபட்டது Balliet மட்டும்தான் என தெரியவந்துள்ளதையடுத்து, பொலிசார் மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Twitchஇல் நேரலை வீடியோ வெளியானதை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டதையடுத்து, வன்முறைக்காட்சிகளை ஒளிபரப்பியதற்காக அந்த தளத்திற்கு கடும் கண்டனங்கள் குவிகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்