சிரியாவில் சித்திரவதைகளை மேற்கொண்ட இருவர் மீது ஜேர்மனியில் விசாரணை: உலகிலேயே இதுதான் முதல்முறை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2011 ஆம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக உருவான எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது அரசு.

அதன் தொடர்ச்சியாக எதிர்த்தோர் ஒடுக்கப்பட்டனர். அப்போது எதிர்ப்பாளர்களை அரசின் உளவுத்துறை கடுமையாக சித்திரவதைகளுக்குள்ளாக்கியது.

அப்படி மக்களை சித்திரவதை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Anwar Raslan மற்றும் Eyad al-Gharib என்னும் அந்த இருவரும் 2012ஆம் ஆண்டு சிரியாவுக்கு சென்றார்கள்.

டமாஸ்கஸ் பகுதியில் ஒரு விசாரணை அமைப்பிற்கு தலைமை தாங்கிய Raslan, எதிர்ப்பாளர்களை ஒரு தனிச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளார்.

அவர் மீது 58 கொலைக்குற்றச்சாட்டுகள், வன்புணர்வு மற்றும் பயங்கர பாலியல் தாக்குதல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2011 ஏப்ரல் முதல் 2012 செப்டம்பர் வரை, சுமார் 4000 பேர் அவர் கையால் மிருகத்தனமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னாள் அதிகாரியான Gharib, ஆங்காங்கு சோதனைச்சாவடிகளை அமைத்து எதிர்ப்பாளர்களை மிருகங்களைப்போல் வேட்டையாடியிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு இளவேனிற்காலத்தில், இரண்டு கொலைகளுக்கு உதவியது குறைந்தது 30 பேரை துஷ்பிரயோகம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் Douma நகரில், அரசுக்கெதிரான பேரணிகளை குலைப்பது பாதுகாவலர்களின் வழக்கம்.

அப்படி செய்யும்போது தப்பியோடும் மக்களை பிடிக்க உதவியதோடு, அவர்களை Raslanஇன் கட்டுப்பாட்டில் இருந்த சிறையில் அடைக்கவும் உதவியுள்ளார் Gharib.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அவர்கள் ஜேர்மனியில் குற்றமிழைத்ததற்காக கைது செய்யப்படவில்லை.

சிரியாவில் அவர்கள் மனித இனத்துக்கு எதிராக செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

எங்கு குற்றம் நடந்தாலும் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும், அகில உலக சட்ட அதிகார எல்லையின் சட்டக் கொள்கைகளின் கீழ், சிரியாவில் குற்றமிழைத்த அவர்கள், ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

2020ஆம் ஆண்டு ஜேர்மனியில் தொடங்கப்பட இருக்கும் இந்த விசாரணையை வரவேற்றுள்ள European Center for Constitutional and Human Rights அமைப்பு (ECCHR), உலகிலேயே முதல் முதலாக ஜேர்மனியில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை குற்றம் செய்துவிட்டு தப்புவோருக்கு எதிராக வைக்கப்படும் முக்கிய படியாகும் என்று கூறியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்