ஆவணங்களின்றி ஜேர்மனியில் அச்சத்தில் தவிக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பரிதாப கதை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஜேர்மனியில் சாலையோரம் வாழும் ஒரு கர்ப்பிணிப்பெண்,மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றால் பிடித்து நாடுகடத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் மறைந்து வாழ்ந்துவருகிறார்.

கானா என்னும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த மேரி என்னும் பெண்,தனது உறவினர்கள் ஜேர்மனிக்கு வந்தால் உதவி கிடைக்கும் என்று கூறியதை அடுத்து ஜேர்மனிக்கு வந்திருக்கிறார்.

இங்கிலாந்திலிருக்கும் தனது உறவினர் ஒருவருக்கு சிறுநீரக தானம் செய்வதற்காக ஐரோப்பாவுக்கு வந்தார் மேரி.

ஆனால் சிறுநீரகம் பெற்ற பிறகும் அந்த உறவினர் இறந்துவிட, அவரை நம்பி வந்த மேரிக்கு விசா பெறமுடியாமல் போய்விட்டது.

ஒரு சிறுநீரகத்துடன் கானாவுக்கு போக வேண்டாம் என்று கூறியுள்ள மருத்துவர்கள் அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை கிடைக்காது என்று எச்சரிக்க, சொந்த நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாமல் ஜேர்மனியில் தெருக்களில் வசிக்கிறார் மேரி.

ஜேர்மனியைப் பொருத்தவரை, சர்வதேச ஒப்பந்தங்கள் பல செய்யப்பட்டுள்ளதையடுத்து,மருத்துவ உதவி என்பது யாராக இருந்தாலும், அது ஒரு அடிப்படை மனித உரிமை, அது யாருக்கும் மறுக்கப்படாது.

ஆனால், நீண்டகால சிகிச்சைகள் தேவை என்றால், அதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு ஆவணங்கள் தேவை.

எனவேதான் முறையான ஆவணங்கள் இல்லாத பல கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

சிகிச்சைக்காக செல்லும்போது, ஆவணங்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டால், நாடு கடத்தப்படுவோம் என்று அஞ்சியே பல பெண்கள் முக்கியமான பிரச்னைகளுக்காக சிகிச்சையை முறைப்படி சரியான நேரத்தில் பெறாமல் தாமதப்படுத்துவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேரி Hamburg நகருக்கு வந்தால், அங்கு அவருக்கு உதவுவதாக ஏற்கனவே கானாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்துள்ள சிலர் தெரிவித்ததையடுத்து அவர் அங்கு சென்றார்.

கிறிஸ்தவ திருச்சபை ஒன்றின் உதவியுடன் அங்கு வசித்துவருகிறார் மேரி. Hamburgஇல் அகதிகளுக்கு நீண்ட காலமாக உதவிவரும் Teresa Steinmüller என்ற தாய் சேய் நல மருத்துவரை சந்தித்துள்ளார் மேரி.

மேரியை பரிசோதித்த Teresa, அவருக்கு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இரத்தத்திலும் சிறுநீரிலும் நோய்க்கிருமிகள் என பல பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இத்தனை பிரச்னைகளுடன், ஒரு சிறுநீரகத்துடன் வாழும் மேரியின் வயிற்றிலிருக்கும் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேரியின் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பயம். எப்போது சிக்குவோம், நாடுகடத்தப்படுவோமோ என்பது மட்டுமின்றி, தான் கானாவில் விட்டுவிட்டு வந்திருக்கும் தனது மகளைக் குறித்த பயமும் மேரிக்கு.

மருத்துவர் Teresaவும் தான் சந்தித்த பல அகதிகள், தங்கள் நாட்டை விட்டு தப்பி வரும் வழியில், பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாகவும், பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியாக பயத்தில் வாழும் மேரிக்கு இன்னொரு பிரச்னை.

அதாவது பிரசவம் வரை எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டாலும், அதற்குப்பிறகு தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சமும் அவருக்கு.

பிறக்கும் குழந்தையின் தந்தை ஜேர்மானியராக இருந்தால், அல்லது ஜேர்மனியில் வாழிட உரிமம் பெற்றவரானால், அவர் தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை அறிவிக்கும்பட்சத்தில், அந்த குழந்தை தனது 18ஆவது பிறந்தநாள் வரை ஜேர்மனியில் வாழ அனுமதிக்கப்படும்.

தனது கர்ப்பத்துக்கு காரணமான நபர், தேவையான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என்று நம்புகிறேன் என்று கூறும் மேரியைப் பார்க்கும்போது, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதியாகச் சென்று மக்கள் அனுபவிக்கும் பாடு, அதிலும் பெண்கள் படும்பாடு எவ்வளவு கொடுமையானது என்பதை உணர முடிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்