இன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தினம்: ஜேர்மனி இணைந்த கதை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

30 ஆண்டுகளுக்கு முன் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை இன்று உலகம் நினைவு கூருகிறது.

ஐரோப்பா இரண்டாக பிரிந்து கிடந்த காலகட்டமான 1961இல் கட்டப்பட்ட பெர்லின் சுவர், ஜேர்மன் தலைநகர் பெர்லினை சுமார் 30 ஆண்டுகளாக இரண்டாக பிரித்து வைத்திருந்தது.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி மக்கள் அதை இடித்துத் தளிவிட்டு சுதந்திரமாக நடமாட ஆரம்பித்தார்கள். 1980களின் நடுப்பகுதியில் சோவியத் யூனியன் ஒரு தீவிர பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

கம்யூனிச அரசுகள் ஊழல் மிக்கதாகவும், செயல்திறனற்றவையாகவும் மாறிப்போயிருந்தன. அமெரிக்காவோடு போட்டி போட்டு கொண்டு ஆயுதங்களை குவிப்பதில் ஈடுபட்டதும், ஆஃப்கானிஸ்தானில் நடத்திய போரும் சோவியத் யூனியனுக்கு பெரும் பொருட்செலவை ஏற்படுத்தின.

GETTY IMAGES

இதன் காரணமாக, கிழக்கு ஜேர்மனி உட்பட கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு நீண்ட காலமாக சோவியத் யூனியன் வழங்கி வந்த நிதியுவியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சமூகத்தில் அதிருப்தி அதிகரித்தது.

சோவியத் யூனியனின் தலைவர் Mikhail Gorbachev நிலைமையை சுமூகமாக்க முயற்சித்தார்.

Glasnost என்று அறியப்படும் அரசியல் மற்றும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மையை Gorbachev அறிமுகப்படுத்தினார்.

புதிதாக கிடைத்த இந்த சுதந்திரத்தை மக்கள் அரசை விமர்சிக்கவும், போராட்டங்களை நடத்தவும் பயன்படுத்தினர்.

GETTY IMAGES

இதன் விளைவாக, ஓரளவு சுதந்திரமான தேர்தலை முதன்முறையாக போலந்து நடத்தியது. ஹங்கேரி தன்னுடைய எல்லையை திறந்து, ஆஸ்திரியா வழியாக கிழக்கு ஜேர்மானியர்கள் மேற்கு பகுதி நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது.

கிழக்கு ஜேர்மனி அதிபர் Erich Honecker பதவி விலக வேண்டியதாயிற்று.

பயணக் கட்டுப்பாட்டை நீக்க நவம்பர் 9 ஆம் தேதி, அரசு உறுதி அளித்தது. அப்போது, அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் 'எப்போது' என கேள்வியெழுப்பியபோது, ’உடனடியாக, இப்போதே’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இத்தகைய தருணத்துக்காக காத்திருந்த பெர்லின் வாழ் மக்கள், ஜேர்மனியை இரண்டாக பிரித்திருந்த பெர்லின் சுவரை உடைத்தனர்.

GETTY IMAGES

உணர்ச்சிவசப்பட்டிருந்த கூட்டம் திறக்கப்பட்ட எல்லையை தாண்டி சென்றது. சுவரின் மறுபக்கத்தில் நூற்றுக்கணக்கான மேற்கு ஜேர்மானியர்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.

இறுதியில், பெர்லின் சுவரால் பிரிந்திருந்த குடும்பங்களும், நண்பர்களும் மீண்டும் சந்தித்தனர். அந்த இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலகம் முழுவதும் பகிரப்பட்டன.

ஒருமாதம் கழித்து, கிழக்கு ஜேர்மனியும் வீழ்ந்தது. சோவியத் யூனியனிலிருந்த பிற அரசாங்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைய தொடங்கின.

சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்தது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் நாள், பெர்லின் சுவர் வீழ்ச்சியடைந்து 11 மாதங்களுக்குப்பின், கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் முறைப்படி இணைந்து ஒரே ஜேர்மனி நாடாகியது.

GETTY AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்