திடீரென மயங்கி சரிந்த சாரதி... நிற்காமல் சென்ற ட்ராம்: துணிந்து பயணிகள் எடுத்த முடிவு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ட்ராம் ஒன்று நிற்காமல் செல்வதை உணர்ந்த பயணிகள், சாரதி மயக்கமடைந்துள்ளதை அறிந்து துணிந்து முடிவெடுத்து ட்ராமை நிறுத்தியுள்ளனர்.

நேற்று முன் தினம், ஜேர்மனியின் Bonn நகரில் தாங்கள் பயணிக்கும் ட்ராம் ஒன்று நிற்காமல் செல்வதை அறிந்த பயணிகள் திகிலடைந்துள்ளனர்.

உடனே துணிந்து செயலில் இறங்கிய இரண்டு பயணிகள், ட்ராமின் சாரதி இருக்கும் கேபினின் கதவை உடைத்துத் திறந்து சென்று பார்க்க, சாரதி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

ஒரு பெண் ட்ராம் நிறுவனத்தை அழைக்க, அவர்கள் எப்படி ட்ராமை நிறுத்துவது என அறிவுரைகள் வழங்க, ஒரு வழியாக ட்ராமை நிறுத்தியுள்ளனர் பயணிகள்.

இதற்கிடையில், பயணிகள் அமரும் இடத்தில் உள்ள அவசர உதவி பிரேக் செயல்படாததால், திகிலடைந்த பயணிகள் பொலிசாரை அழைத்துள்ளனர்.

ஆனால், அந்த பிரேக்கை அழுத்தும்போது, அது ட்ராமின் சாரதிக்கு ஒரு சிக்னல் கொடுக்கும், அவர் அதைப் பார்த்து ட்ராமை நிறுத்தினால்தான் ட்ராம் நிற்கும், நாமாகவே ட்ராமை நிறுத்த முடியாது என்ற தகவலை, பின்னர்தான் பயணிகளுக்கு ட்ராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமயோகிதமாக செயல்பட்டு, சரியானதை செய்து ட்ராமை நிறுத்தி அசம்பாவிதங்களை தவிர்த்து, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர்களை மனதார பாராட்டியுள்ளார் நகர மேயரான அஷோக் ஸ்ரீதரன்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளனர். ட்ராமின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ராமை நிறுத்த முயன்ற இரண்டு பயணிகளும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்