சாலையில் கிடந்த பையில் இருந்த 16,000 யூரோக்கள்: கண்டுபிடித்தவர் சொன்ன வார்த்தை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மரத்தடியில் கிடந்த பை ஒன்றிற்குள் 16,000 யூரோக்களும் ஏராளம் பரிசுப்பொருட்களும் இருந்த நிலையில், அதைக் கண்டுபிடித்தவர் சொன்ன விடயம் பொலிசாரையே ஆச்சரியமடையச் செய்துள்ளது.

Krefeld நகரில், 63 வயது ஜேர்மானியர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய இரவு தனது முதுகு பையை ஒரு மரத்தின் கீழ் மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்தப் பை 51 வயது நபர் ஒருவர் கையில் கிடைத்திருக்கிறது.

அதை அவர் திறந்து பார்க்க, அதற்குள் 16,000 யூரோக்களும் ஏராளம் பரிசுப்பொருட்களும் இருந்ததைக் கண்டதும், உடனடியாக அதைக் கொண்டு பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டார்.

பொலிசாரும் விரைந்து அதன் உரிமையாளரைத் தேடி, அந்த பையை அவரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

ஜேர்மனியில், காணாமல் போன பொருள் எதையாவது ஒருவர் கண்டுபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தால் அந்த பொருளின் மதிப்பைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் கண்டுபிடித்தவருக்கு ஒரு தொகை வழங்கப்படும். அதை finder's fee என்றே அழைப்பார்கள்.

அதன்படி, இந்த பையை கண்டுபிடித்தவருக்கு 490 யூரோக்கள் வழங்கப்படவேண்டும். ஆனால், பையை கண்டுபிடித்தவரோ, அந்த தொகையை வாங்க மறுத்துவிட்டார்.

இது கிறிஸ்துமஸ் நேரம், அதனால் எனக்கு அந்த பணம் வேண்டாம் என்று அவர் கூறிவிட, ஆச்சரியமடைந்த பொலிசார், இந்த விடயத்தை தங்கள் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அந்த பதிவு 1000 லைக்குகளையும் 180 கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

பலரும் அவரை பாராட்டியுள்ள நிலையில், சிலர், இப்படி யாராவது பெரிய தொகையை கையில் வைத்துக்கொண்டு நடமாடுவார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

உண்மையில், பல நாடுகளில் கிரெடிட், டெபிட் அட்டைகளை கொண்டு செல்லும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்துவரும் நிலையிலும், ஜேர்மனியைப் பொருத்தவரையில் விலையுயர்ந்த பொருட்களைக்கூட ரொக்கம் கொடுத்து வாங்கும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்