வழக்கமாக புத்தாண்டை பட்டாசுகளுடன் வரவேற்கும் ஜேர்மானியர்கள்: இம்முறை எடுத்துள்ள முக்கியமான முடிவு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புத்தாண்டை வழக்கமாக பட்டாசுகளுடன் வரவேற்கும் ஜேர்மானியர்களில் பெரும்பான்மையோர், இம்முறை பட்டாசுக்கு தடை விதிப்பதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் புத்தாண்டை கொண்டாடியுள்ள அனைவருக்குமே, ஜேர்மானியர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்பதை எவ்வளவு விரும்புவார்கள் என்பது மிக நன்றாக தெரியும்.

ஆனால், சமீப காலமாக மாசு அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக பட்டாசு வெடிப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. வன விலங்குகள் மீதாக அக்கறையும் இதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில், ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பெரும்பாலான ஜேர்மானியர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதை வரவேற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 57 சதவிகிதம் பேர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் கருதி புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். 36 சதவிகிதத்தினர் இந்த முடிவை எதிர்க்கிறார்கள்.

7 சதவிகிதத்தினர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், வானில் பட்டசுகள் வெடித்துச் சிதறுவதைக் காண்பது தங்களுக்கு மகிழ்ச்சி என 84 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளதை மறுக்கமுடியாது.

இந்த ஆய்வு 2000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. ஜேர்மனியிலுள்ள சுமார் 30 நகரங்கள் மற்றும் நகராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களில் புத்தாண்டை வரவேற்க பட்டாசு வெடிப்பதற்கு பகுதி அல்லது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் பெர்லின், ஹாம்பர்க், முனிச் மற்றும் கொலோன் ஆகிய நகரங்களும் அடங்கும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்