ஈரானில் வலுப்பெறும் மக்கள் போராட்டம்: ஜேர்மனி மேற்கொண்ட முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
333Shares

ஈரானிய மக்களை சுதந்திரமாக போராட அனுமதிக்க வேண்டும் என அந்த நாட்டு அரசை ஜேர்மனி கேட்டுக் கொண்டுள்ளது.

உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணையால் தவறுதலாகச் சுடப்பட்டதாக ஈரான் ஒப்புக் கொண்டதையடுத்து நாட்டின் பல இடங்களில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் செய்தி ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஜேர்மனியும் ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மன் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Adebahr கூறும்போது, தங்கள் போராட்டங்களைச் சுதந்திரமாக நடத்த ஈரான் மக்களை அனுமதிக்க வேண்டும்.

ஈரான் மக்களுக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்த எல்லா உரிமையும் உண்டு. ஈரான் மக்கள் நடத்தும் போராட்டம் சுதந்திரமானதாகவும், அமைதியாகவும் நடக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் தெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் மேற்கொண்ட அனைவரும் பலியாயினர்.

பலியானவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவர்கள்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாகத் தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.

தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.

திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் அரசின் செயலைக் கண்டித்து தெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்