உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்...ஜேர்மனியில் பரவும் காய்ச்சல்: அரசு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் குளிர் காலம் தொடங்கியது முதல், 13,000க்கும் அதிகமானோர் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், மக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதுவும், இந்த தடுப்பூசி போட்டு 14 நாட்கள் ஆனபிறகுதான், அது நோயை எதிர்க்க உடலை தயார் செய்யும் என்பதால், தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மக்களை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக 60 வயதைக் கடந்தோர், நீண்ட நாட்கள் உடல் நலமின்றி இருப்போர், கர்ப்பிணிகள், மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

ஜேர்மனியில், அக்டோபர் 2019இல் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை 13,350 பேர் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக முடிவுகள் உறுதி செய்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 4,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, ப்ளூ வேகமாக பரவி வருவது உறுதியாகிறது.

ஆகவேதான் அவசரமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு இந்த வலியுறுத்தல். ப்ளூவால் பாதிக்கப்பட்டு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இதுபோக, சிறு குழந்தைகள் பயிலும் Kindergarten பள்ளிகளில் 15 இடங்களில் பலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ப்ளூ என சாதாரணமாக அழைக்கப்படும் இன்ப்ளூயென்சா, சுவாச மண்டலத்தை பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும்.

சாதாரணமாக ஜலதோஷம் பிடித்தாலே அதை பேச்சுவாக்கில் ப்ளூ என்று அழைத்தாலும், உண்மையில் ப்ளூ காய்ச்சல் என்பது அதிக தீவிரமானதாகும்.

ப்ளூ வந்தால், திடீரென உடல் சோர்ந்துபோவதோடு, காய்ச்சலும், தலைவலியும், கை கால் வலியும், வறட்டு இருமலும் சேர்ந்துகொண்டு பாடாய்ப்படுத்திவிடும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்