சீனாவுக்கு செல்லாமலே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மானியர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சீனாவுக்கு செல்லாமலே நான்கு ஜேர்மானியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு செல்லாமல் ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள முதல் ஐரோப்பியர்கள் இவர்கள்தான்.

33 வயதுடைய பவேரியாவில் பணி புரியும் ஒரு ஜேர்மானியருக்கு, ஷாங்காயைச் சேர்ந்த சீனப்பெண்ணான தன்னுடைய சக ஊழியரிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்த சீனப்பெண், கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானிலிருக்கும் தனது பெற்றோரை சமீபத்தில் தான் சந்தித்து வந்துள்ளார்.

அவர் பவேரியாவில் இருக்கும் வரை அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்திருக்கிறது.

பவேரியாவுக்கு வந்துவிட்டு ஷாங்காய் செல்லும் வழியில்தான் அவருக்கு வெளிப்படையாக அறிகுறிகள் காணப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஷாங்காய் திரும்பிய நிலையில், இங்கே பவேரியாவில் அவரை சந்தித்திருந்த அவரது சக ஊழியரான ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டு, அவரிடமிருந்து அவரது சக ஊழியர்கள் மூன்று பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, அந்த ஆண் ஊழியருக்கும் அறிகுறிகள் காணப்படுவதற்கு முன்பே அவரிடமிருந்து மூவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த நான்கு பேரும், பவேரியாவிலுள்ள Webasto என்னும் கார் உதிரி பாகங்கள் நிறுவனத்தில் பணி செய்பவர்கள் ஆவர்.

ஆகவே, அந்த நிறுவனத்தில் பணி புரியும் 40 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக இன்று அவர்கள் ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருப்பதாக பவேரியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நான்கு ஜேர்மானியர்களும் முனிச் மருத்துவமனையில் உள்ள தனி வார்டு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers