எங்களுக்கு அதிர்ச்சிதான் ஆனால் ஆச்சரியமில்லை: துப்பாக்கிச்சூடு குறித்து பாதிக்கப்பட்டவர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வலது சாரி தீவிரவாத எண்ணங்கள் கொண்ட ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து பேசும் குர்திஷ் இன மக்கள், இந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சிதான் ஆனால் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளனர்.

தொபியாஸ் ரத்ஜென் (43) என்ற நபர் ஜேர்மனியிலுள்ள இரண்டு ஷிஷா விடுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

அதில், 35 வயதான ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட ஒன்பது பேர் பலியானார்கள். ஒன்பது பேரைக் கொன்ற தொபியாஸ், தன் வீட்டுக்குச் சென்று தனது 72 வயதுடைய தாயை தன் தந்தையின் கண்முன் சுட்டுக்கொன்றுவிட்டு, தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சோக சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள குர்திஷ் ஊடகவியலாளரான Luqman என்பவர், இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியளித்தாலும் ஆச்சரியமளிக்கவில்லை என்கிறார்.

நான் ஒரு அரசியல் அகதி என்று கூறும் Luqman, உங்களுக்கு பாதுகாப்பான இடம் என்று கருதி ஒரு இடத்துக்கு செல்கிறீர்கள், அங்கேயே உங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டால், அதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்கிறார்.

குர்திஷ் தீவிரவாதம் என்ற ஒரு சொல்வழக்கே ஜேர்மனி அரசியலிலும் ஊடகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

அப்படி ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்துவீர்களென்றால் அவர்களை அவமதிக்கிறீர்கள் என்றுதானே பொருள், இது ஜேர்மனியில் நடக்கிறதே என்கிறார் Luqman.

ஜேர்மானியர்கள் இந்த கோர சம்பவம் குறித்து பேசக்கூட மாட்டார்கள் என்று கூறும் Dilar என்பவர், எங்களை இங்குள்ளவர்கள் எப்போதுமே வேற்று மனிதர்களாகத்தான் பார்த்துள்ளார்கள்.

ஷிஷா பார்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதைத்தான் காட்டுகின்றன. காரணம் அங்கு எங்களைப்போன்றவர்கள் மட்டும்தான் கூடுவார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும் என்கிறார்.

Dastan என்னும் இளம்பெண், நாங்கள் ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட இடங்களில் கூடுகிறோம்.

எங்கள் நாட்டில் எங்கள் இனத்தவர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இங்கு கூடுகிறோம்.

ஆனால், அங்கேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நிச்சயம் இது யோசிக்கவேண்டிய விடயம் என்கிறார்.

பேசிய ஒவ்வொருவருமே, தாங்கள் தங்கள் நாட்டை விட்டு ஜேர்மனியில் வந்து வாழும் நிலையில், இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறார்கள்.

ஜேர்மனி கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள் இன்னும் இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்