கொரோனாவால் கடுமையாக தாக்கப்பட்டும் தாக்குப்பிடிக்கும் ஜேர்மனி: ரகசியம் இதுதானாம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனாவால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இருந்தும் ஜேர்மனி தாக்குப்பிடித்து வருவது மற்ற நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை ஜேர்மனியில் சுமார் 11,000 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள், ஆனால் உயிரிழந்தவர்கள் 20 பேர் மட்டுமே. இறப்பு வீதம் வெறும் 0.18 சதவிகிதம்தான்!

இது இத்தாலி (8.3 சதவிகிதம்), சீனா (4 சதவிகிதம்), பிரித்தானியா (3.9 சதவிகிதம்) மற்றும் பிரான்சை (2.9 சதவிகிதம்) விடவும் மிகவும் குறைவு.

இதற்கு காரணம் என்ன என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று கூறுகிறார் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த Richard Pebody.

ஒருவேளை இது பல காரணிகளின் கலவையான பலனாக இருக்கலாம் என்கிறார் அவர். அறிவியலாளர்கள், ஜேர்மனியில் மட்டும் கொரோனாவால் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்கு, ஜேர்மன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கும் போதுமான எண்ணிக்கையிலான படுக்கைகள் தொடங்கி பல்வேறு காரணங்களை முன்வைக்கிறார்கள்.

ஆரம்பகட்டத்திலேயே பரிசோதனைகளை தொடங்கிவிட்டது ஒரு காரணமாக இருக்கும் என்கிறார் பெர்லின் மருத்துவமனை ஒன்றின் வைரஸ் தொடர்பான அறிவியல் துறையின் இயக்குநரான Christian Drosten ஜேர்மனியில் ஏராளம் தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு கொரோனா தொற்று தொடங்கிய ஜனவரி வாக்கிலேயே அந்த ஆய்வகங்கள் கொரோனா சோதனைகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஆய்வகங்கள் இருப்பதால் நாளொன்றிற்கு 12,000 பேருக்கு சோதனை நடத்தமுடியும்.

ஆகவே, மற்ற நாடுகளை விட ஜேர்மானியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது எளிதானதாக உள்ளது.

இன்னொரு விடயம், ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமான உடல்வாகு கொண்டவர்கள்.

ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்கிறார் ராபர்ட் கோச் நிறுவன தலைவரான Lothar Wieler.

இதுவும், ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்