ஜேர்மனி இறைச்சி தொழிற்சாலையில் கொரோனா பரவல்: அங்கு அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து உள்ளுர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அந்த இறைச்சித் தொழிற்சாலையில் கொரோனா பரவியதன் பின்னணியில் நவயுக அடிமைத்தனம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, அங்கு பணியாற்றும் பணியாளர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுவதாகவும், அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விதமே கொரோனா தொற்று பரவ காரணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் இப்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இறைச்சி தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொமேனியாவிலிருந்து வந்துள்ள அந்த பணியாளர்கள் மோசமான சூழலில் அடிமைகளைப் போல அந்த இறைச்சித் தொழிற்சாலையில் அடைந்துகிடக்கிறார்கள்.

தாங்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

அவர்களுக்கு கொரோனா பரவிய தகவல் வெளியான பின்னர்தான், அதிகாரிகள் வந்து அந்த தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

அங்கிருந்த பணியாளர்களில் குறைந்தது 249பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுள்ளது.

இந்த விடயம் உள்ளூர் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்கள் இந்த வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறித்து தங்கள் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் ஏழை மக்கள், எந்த வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்கிறார் உள்ளூர் பெண் ஒருவர்.

தற்போது அந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்கிறார்கள் என்று கூறும் மற்றொருவர், அந்த ரொமேனிய பணியாளர்களிடமிருந்து தங்களுக்கும் கொரோனா பரவிவிடும் என மக்கள் அச்சமுற்றிருப்பதாக தெரிவிக்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்