கொரோனா அச்சுறுத்தல்... வெளிநாட்டு விமான நிலையத்தில் 55 நாட்கள் தங்கிய ஜேர்மானியர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

கொரோனா அச்சுறுத்தலால் விமானச்சேவை நிறுத்தப்பட்டதால் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே தங்கிய ஜேர்மானியர் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் திகதி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா சென்றவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்கள் அவர்களின் நாட்டிற்குத் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு மீட்பு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்திலேயே வசித்து வந்த ஜேர்மானியர் Edgar Zeibat, இன்று காலை கே.எல்.எம் ஏர்லைன்ஸ் நிவாரண விமானத்தின் மூலம் ஆம்ஸ்டர்டாமிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

கடந்த மார்ச் 18 ஆம் திகதி வியட்நாமில் இருந்து டெல்லி சென்ற அவர், அங்கிருந்து இஸ்தான்புல் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச விமான சேவைகள் மொத்தமாக முடக்கப்பட்டதால், அந்த ஜேர்மானியரும் விமான நிலையத்திலேயே தங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரக அதிகாரிகளுக்கு குறித்த தகவல் தெரியவந்த நிலையில், அவர்கள் உரிய ஆவணங்கள் அளிக்க முன்வந்துள்ளனர்.

ஆனால் அந்த நபர் ஜேர்மனி செல்ல மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், Edgar Zeibat மீது ஜேர்மனியில் சில குற்றவியல் வழக்குகள் இருப்பதாக கண்டறிந்தனர்.

இருப்பினும் தூதரக அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் அவர் ஜேர்மனி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணிக்கு 291 பயணிகளுடன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு Edgar Zeibat-கு கொரோனா வைரஸ் தொற்றுக்காகச் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்