ஜேர்மனியில் பொலிசாரின் துப்பாக்கிகளைப் பறித்துவிட்டு காட்டுக்குள் தப்பிய நபர் அனுப்பிய இரண்டு பக்க கடிதம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் பொலிசாரை மிரட்டி, அவர்களின் துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் தலைமறைவான நபர் தற்போது இரண்டு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் ஓபனாவு பகுதியில் கடந்த ஞாயிறன்று 31 வயதான யவ்ஸ் ரோஷ் என்பவர் விசாரிக்க சென்ற நான்கு பொலிசாரை மிரட்டி, அவர்களின் ஆயுதங்களுடன் காட்டுக்குள் மாயமானார்.

அப்போதிருந்து, நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள், நாய் படை மற்றும் அவசர சேவைகள் படையினர் உள்ளிட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இருப்பினும் இதுவரை அவரைப் பற்றிய எந்த தடயமும் இல்லை. இந்த நிலையில் பொலிசாருக்கு யவ்ஸ் ரோஷ் தொடர்பில் இரண்டு பக்க கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

ஆனால், அந்த கடிதமானது உண்மையில் தப்பியோடியவரிடமிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அந்த கடிதத்தில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என உறுதி செய்துள்ள பொலிசார், அது அந்த நபரின் வனப்பகுதி மீதான பற்றை குறிப்பிடுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான அந்த கடிதத்தை ஆய்வு செய்த ஒரு இளைஞர், இது அமெரிக்காவில் கடித வெடிகுண்டுகளுக்கு பிரபலமான Theodore Kaczynski என்பவரின் கருத்தை ஒத்துப் போவதாக குறுப்பிட்டுள்ளார்.

1978 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் கசின்ஸ்கி 16 கடித வெடிகுண்டுகளை அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்தார். இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 23 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஜேர்மன் பொலிசார் புதன்கிழமையும் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்தனர்.

ஓபனாவு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யவ்ஸ் ரோஷ் நடமாட வாய்ப்புள்ள பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நிபுணர்களும் தற்போது இந்த விவகாரத்தில் உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்