ஜேர்மனியில் கொரோனா மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்ட தலைநகர்: அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அது கொரோனா மையப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 52.8 பேராக உயர்ந்துள்ளது.

ஆகவே, பெர்லின் அபாய பகுதியாக மாறியுள்ளது, ராபர்ட் கோச் நிறுவனத்தின் வரையறையின்படி ஒரு இடத்தில் ஏழு நாட்களுக்குள் 100,000 பேருக்கு 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுமானால், அது அபாய பகுதியாக கருதப்படும்.

நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெர்லினில் 498 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொற்று தொடங்கிய நாளிலிருந்து இதுவரை பெர்லினில் 17,112 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். 13,965 பேர் குணமடைந்துள்ளார்கள், 233 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தற்போது பெர்லினில் 2,914 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரித்துவருவதையடுத்து, பெர்லின் செனட் மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்களை இரவு 11 மணிக்கு மேல் காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் இந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்