ஜேர்மன் எல்லையில் செயலிழக்கச்செய்ய முயன்ற வெடிகுண்டு வெடித்துச் சிதறியது: வெளியான வீடியோ

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் எல்லையில் போலந்து நிபுணர்கள் செயலிழக்கச்செய்ய முயன்ற வெடி குண்டு எதிர்பாராமல் வெடித்துச் சிதறியது.

இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைக்கும் முயற்சியில், ஜேர்மன் கடல் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆறு மீற்றர் நீளமும் 2.4 டன் எடையும் கொண்ட அந்த வெடிகுண்டு, 3.6 டன் TNT வெடிபொருளுக்கு சமமானது.

Tallboy என்று அழைக்கப்படும் அந்த வெடிகுண்டு, இலக்கின் அருகில் பூமிக்கடியில் வெடிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அது வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வலைகளால் அழிவு ஏற்படும்.

அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் இறங்கிய போலந்து நாட்டு நிபுணர்கள், ஒரு நுண் அதிர்வு கூட அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிடும் என்பதாலும், கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதை வெடிக்கச்செய்தால் கூட, 500 மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் பாலத்தைக் கூட அது அழித்துவிடும் என்பதாலும், அதை வெடிக்கச்செய்யாமல் ரிமோட் மூலம் அதை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.

அதனால், அந்த பணி நடப்பதற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் 750 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இந்த பணி முடிய ஐந்து நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பால்டிக் கடல் பகுதியில் 16 கிலோமீற்றர் தொலைவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆனால், அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில், எதிர்பாராமல் அது திடீரென வெடித்துச் சிதறியது.

நல்லவேளையாக யாரும் இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என்றாலும், அருகிலுள்ள வீடுகள் பயங்கரமாக அதிர்ந்தன.

வெளியாகியுள்ள வீடியோவில், அந்த வெடிகுண்டு கடலுக்கடியில் வெடித்துச் சிதறுவதால் தண்ணீர், கடல் பரப்புக்கு மேலே மலைபோல் எழுவதைக் காணலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்