மனைவிக்கு தப்பி மறைந்து வாழும் ஜேர்மானியர்: குடும்ப வன்முறையின் அதிகம் வெளியே தெரியாத முகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

குடும்ப வன்முறை என்றாலே, ஒரு பெண்ணை அவளது கணவனும் அவரது உறவினர்களும் துன்புறுத்துவது என்ற ஒரு காட்சிதான் பலருக்கும் தெரியவரும்.

ஆனால், ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜேர்மானியர் ஒருவர்.

பெண் தன் கணவனை அடிப்பது போன்ற காட்சிகளை காமெடி படங்களில் வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால், உண்மையாகவே ஒரு பெண் தன் கணவனை துன்புறுத்தும் விடயமும் சமுதாயத்தில் நடக்கிறது என்ற உண்மையை விவரிக்கிறது Tami Weissenberg என்ற ஜேர்மானியரின் கதை.

கற்பனைக்காக Tamiயின் மனைவியின் பெயரை Miya என்று வைத்துக்கொள்வோம். Miyaவை Tami சந்தித்தபோது, தன்னை எப்படியெல்லாம் தன் முன்னாள் கணவன் அடித்துத் துன்புறுத்தினார் என்பது குறித்து கதை கதையாக கூறி கண்ணீர் விட்டார் Miya. Miyaவின் கதையைக் கேட்க கேட்க, அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது Tami.

பரிதாபப்பட்டு Miyaவை திருமணம் செய்துகொண்ட Tami, இனி அவரது கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராமல் பார்த்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டார்.

இருவரும் ஒரே வீட்டில் குடியேறினார்கள், இருவருக்கும் ஒரே வங்கிக் கணக்கு, எதையும் இருவரும் பகிர்ந்தே செய்தார்கள்...

இப்படி வாழ்க்கை ஓடிய நிலையில், விடுமுறை ஒன்றிற்காக ஹொட்டல் ஒன்றை புக் செய்தார்கள் இருவரும். ஆனால், அந்த ஹொட்டல் தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று கூறி முரண்டு பிடித்த Miya, அந்த ஹொட்டல் மேலாளரை திட்டச் சொல்லியிருக்கிறார் Tamiயிடம், அத்துடன் ஹொட்டலுக்கு பணமும் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார் Miya.

Tami அந்த மேலாளரை அவமதிக்க விரும்பாததால் Miya கூறியபடி செய்யவில்லையாம். பேசாமல், அவர் காருக்குள் போய் உட்கார்ந்துகொள்ள, காரில் ஏறிய Miya, Tamiயை தலையில் மீண்டும் மீண்டும் அடித்திருக்கிறார், பயங்கரமாக கத்தியிருக்கிறார்.

சரி, பழைய வாழ்வில் பட்ட கஷ்டங்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறார் என தன்னைத்தான் ஆறுதல் படுத்திக்கொண்டுள்ளார் Tami.

ஆனால், இது தொடர்ந்திருக்கிறது, பல விடயங்களுக்காக தினமும் அடிதடி, கடைசியில் காயங்களுடன் Tami மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது விடயம்.

இந்த விடயம் உண்மையில் Tami வாழ்க்கையில் மட்டுமல்ல... உலக முழுவதும் இதுபோல் நடக்கிறதாம். மெக்சிகோவில் 25 சதவிகிதம் ஆண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். கென்யா, நைஜீரியா மற்றும் கானா என பல நாடுகளில் இதே வன்முறை நடக்கிறதாம்.

இந்நிலையில், இப்போது ஜேர்மனியில் இந்த பிரச்சினைக்கு மெதுவாக விடிவு கிடைக்கத் துவங்கியுள்ளது.

இந்த ஆண்டு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு உதவும் வகையில் தொலைபேசி எண் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஏராளமான ஆண்கள் உதவி கோரி அழைக்கிறார்களாம். இதற்கிடையில், நம் கதையின் நாயகன் Miyaவைப் பிரிந்துவிட்டார். இப்போது அவர் வேறொரு இடத்தில் அவரது மனதுக்கேற்ற வேறொரு துணையுடன் வாழ்ந்து வருகிறார்.

தன்னைப் போன்ற ஆண்களுக்கு உதவுவதற்காக அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார் அவர், என்றாலும் தன் முன்னாள் மனைவியை அவமதிக்கும் விதத்தில் பேச மறுக்கிறார் அவர்.

அவள் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள், அதனால் கிடைத்த உறவை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் அவளை அப்படி நடந்துகொள்ளச் செய்திருக்கிறது என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்