அமெரிக்க தேர்தல் நமக்கு ஒரு அவசர எச்சரிக்கை: ஜேர்மன் நிதி அமைச்சர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நாடு முழுவதும் ஆழமான பிளவை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், ஜேர்மனிக்கோர் எச்சரிக்கை என்று கூறியுள்ளார் ஜேர்மன் நிதி அமைச்சர்.

கசப்புணர்வை வெளிப்படுத்திய அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தையும், சிறிதளவு வித்தியாசமே காட்டிய வாக்கு எண்ணிக்கையும் கவனித்த பிறகு, அதே போன்ற ஒரு நிகழ்வு ஜேர்மனியிலும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை ஜேர்மனி உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று எச்சரித்துள்ளார், ஜேர்மன் நிதி அமைச்சரும் துணை சேன்ஸலருமான Olaf Scholz.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகிக்கும் ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ள Olaf, அதே நேரத்தில் இப்போதுதான் அமெரிக்காவில் வேலையே துவங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அமெரிக்க சமுதாயத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே காணப்படும் பிளவுகளை சுட்டிக்காட்டிய Olaf, அது மட்டுமின்றி, நகர மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இடையில் கூட பிளவு இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

அமெரிக்காவில் காணப்படும் இந்த பிளவுகள் ட்ரம்பால் உருவாக்கப்பட்டது அல்ல, என்றாலும், அவர் தனது ஆட்சிக்காலத்தில், இரக்கமின்றி அவற்றை பெரிதாகிவிட்டார் என்கிறார் Olaf.

இதேபோன்ற பிளவுகள் ஜேர்மனியிலும் காணப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள Olaf, சிலர் தாங்கள் இரண்டாந்தர மக்கள் என்றும், வேறு சிலரோ தாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்றும் கருதுவதாக தெரிவித்தார்.

இது மோசமானது என்று கூறும் Olaf, நமது சமுதாயம் ஒன்றே என்று பார்ப்பதன் மூலம்தான், அது நீண்டகாலம் நன்றாக செயல்படும் என்கிறார்.

நாம் அமெரிக்காவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறும் Olaf, பயங்கர சேதத்தை உண்டுபண்ணும் தவறுகளை நாம் தவிர்க்கவேண்டும் என்றார்.

ஜேர்மனியும் அடுத்த ஆண்டில் தனது தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், Olafஇன் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியை 14 ஆண்டுகள் ஆட்சி செய்த சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார். அவருக்கு அடுத்து ஜேர்மனியை ஆளப்போவது யார் என்ற கேள்வியுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்