பிரெக்சிட்: ஜேர்மனிக்கு இழப்பு என புலம்பும் அமைச்சர்... உண்மை நிலவரம் என்ன?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
355Shares

பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முடிவாக இருக்கும் ஒப்பந்தத்தால் தங்களுக்கு இழப்பு என்கிறது ஜேர்மனி.

பிரெக்சிட் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், மீன் பிடித்தல் விவகாரம் பெருமளவில் அடிபடுவதை காணலாம்.

இந்நிலையில், புதிய ஒப்பந்தம் மீன் பிடித்தல் விவகாரம் குறித்து என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம்.

என்றாலும், பிரித்தானிய கடல் பரப்பில் பிடிக்கப்படும் மீனில் பெரும்பகுதி பிரித்தானியாவுக்குத்தான். இந்த நடைமுறை ஐந்தரை ஆண்டுகளுக்குத் தொடரும்.

அதன் பிறகு, மீனை எப்படி பங்கிட்டுக்கொள்வது என இரு தரப்பினரும் ஆண்டுதோறும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்வார்கள்.

ஆனால், 2026க்குப் பின் ஐரோப்பிய ஒன்றிய படகுகளுக்கு தங்கள் கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கும் அதிகாரம் பிரித்தானியாவுக்கு உண்டு.

அதேபோல், பிரித்தானியா, தான் பிடித்த மீனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் பட்சத்தில், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்கவும் வாய்ப்பு உண்டு.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த ஒப்பந்தம் வலியைக் கொடுக்கும் ஒரு இழப்பை ஐரோப்பிய ஒன்றிய மீன் பிடி தொழிலுக்கு கொடுக்கும் என்று கூறி, ஜேர்மன் வேளாண்மைத்துறை அமைச்சர் Julia Kloeckner தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜேர்மனியும் சரி, பிரான்சும் சரி, ஏன் பிரித்தானியாவும் கூடத்தான், பிரெக்சிட்பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே மீன் பிடிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கின்றன.

ஆனால், பிரித்தானியாவுடன் செய்யப்படும் ஒப்பந்தத்தால் மீன் பிடித்தல் இழப்பு ஏற்பட்டால் கூட, அது ஐரோப்பிய ஒன்றியத்துக்கானாலும் சரி, பிரித்தானியாவுக்கானாலும் சரி, மிகச்சிறிய இழப்பையே பொருளாதார ரீதியாக ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

2019இல் 0.02 சதவிகிதம்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது, அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நிலப்பகுதியால் மட்டுமே சூழப்பட்டுள்ள சில நாடுகளில் மீன் பிடி தொழிலே கிடையாது.

ஆக, மீன் பிடித்தல் பிரெக்சிட்டைப் பொருத்தவரை, ஒரு அரசியல் பிரச்சினைதான் என்ற கருத்து நிலவுவதை தவிர்க்க முடியாது.

அதே நேரத்தில், கடற்கரையோரம் வாழும் மக்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு மீன் பிடித்தல்தான் முக்கிய வருவாய் அளிக்கும் தொழில் என்பதையும் மறுக்கமுடியாது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்