ஜேர்மனியில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளதையடுத்து, பொது முடக்கத்தை பிப்ரவரி மாதம் 14 வரை நீட்டிக்க ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உத்தரவிட்டுள்ளார்.
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்கம் பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை, அலுவலகங்கள் தங்கள் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை பணியாளர்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும்.
பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போதும், பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போதும், மக்கள் தரமான மாஸ்க் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தலாம். பொது இடங்களில் மதுபானம் அருந்த அனுமதி இல்லை.
பள்ளிகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யாத கடைகள், உணவகங்கள், விளையாட்டு கூடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.