60 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த ஒருவர் ஜேர்மனிக்கு நாடு கடத்தல்: பின்னணியை விவரிக்கும் செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒருவர், தனது முதிர் வயதில் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். Friedrich Karl Berger (95) என்பவர் 1959ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் Tennessee பகுதியில் வாழ்ந்துவருகிறார்.

அவரை ஜேர்மனிக்கு நாடுகடத்தும்படி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. அதற்கு காரணம், 1945ஆம் ஆண்டு, ஜேர்மனியில் உள்ள Neuengamme என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்திரவதை முகாம் ஒன்றில் Karl காவலராக பணியாற்றியுள்ளார். அந்த சித்திரவதை முகாமில் 40,000 கைதிகள் உயிரிழந்துள்ளார்கள்.

தான் அந்த சித்திரவதை முகாமில் வேலை செய்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Karl, ஆனால், தான் யுத்தம் முடியும் காலகட்டத்தில் சில வாரங்கள் மட்டுமே அங்கு காவலராக வேலை செய்ததாகவும், தான் வேலை செய்த நேரத்தில் யாரும் கொலை செய்யப்படவோ துஷ்பிரயோகம் செய்யப்படவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அப்போது தனக்கு வெறும் 19 வயதுதான் என்றும், தான் அங்கு வேலை செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ள Karl, 75 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை வெளியேற்றுவது தன் வீட்டிலிருந்து தன்னை வெளியேற்றுவதுபோல் உள்ளதாகவும், இது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில், அந்த முகாமிலிருந்து Karl இடமாற்றம் கோரவும் இல்லை, அத்துடன் அவர் ஜேர்மனியிலிருந்து தனது போர்க்காலப் பணிக்காக ஓய்வூதியமும் பெற்றுவந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

எனவே, ஜேர்மனியின் கோரிக்கையின்பேரில் Karl அமெரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க அட்டர்னி ஜெனரலான Monty Wilkinson இது குறித்துக் கூறும்போது, அமெரிக்கா, நாஸி காலகட்டத்தில் மனித சமுதாயத்திற்கெதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் தப்பி வந்து பத்திரமாக வாழும் புகலிடம் அல்ல என்பதை இந்த நாடு கடத்தல் சம்பவம் காட்டியுள்ளது என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்