மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட இவைகள் தான் காரணம்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், பின் சிறுகுடல் என்று பயணம் செய்து, தன்னிடம் இருக்கும் சத்துக்களையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கையாக பெருங்குடலுக்கு வந்து சேரும்.

அதில் தண்ணீர்தான் முக்கால் பங்கு இருக்கும். இதில் பெரும்பகுதியை உறிஞ்சிக்கொண்டு, கால் லிட்டர் தண்ணீரை மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை.

சமயங்களில் அதற்கு தாகமெடுத்து, தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிவிடும். இதனால் மலம் இறுகி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் என ஒழுங்குபடுத்திக் கொள்கிறவர்களுக்கு பெரும்பாலும் மலச்சிக்கல் ஏற்படாது. ஆனால் அநேகம் பேர் இதில்தான் தவறு செய்கின்றனர்.

மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, பயணத்தில் இருப்பது, கழிப்பறை அருகில் இல்லாதது என்று காரணங்களைக் காட்டி தவிர்க்கின்றனர் அல்லது தள்ளிப் போடுகின்றனர்.

இதனாலும் மலச்சிக்கல் ஏற்படும், இயல்பாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும், அதோடு உணவுமுறை மாறிவிடும், உடற்பயிற்சி குறைந்துவிடும்.

ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பார்கள், இதனால் உடலியக்கம் குறைந்துவிடும், பலருக்கு மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்புவலி என்று வலிகளும் சேர்ந்துகொள்ளும். இதனால் மலம் கழிப்பதை தள்ளிப்போடுவார்கள். இவை எல்லாம் சேர்ந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

முதலில் உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், தினமும் நடைப்பயிற்சி அவசியம், இயலாதவர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

புகை, மது தவிர்க்கவும், தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது, மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம், எந்த அவசரத்துக்காகவும் இதைத் தவிர்க்கக்கூடாது.

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்கக்கூடாது. தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானிய உணவுகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.

வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை, கீரை, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

இவற்றை அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் ஆகிய வாசனைப் பொருட்களிலும் நார்ச்சத்து உண்டு.

எனவே மிளகு ரசம், கொத்துமல்லி சட்னி போன்றவை நல்லது. நாளொன்றுக்கு 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments