கல்லீரலை பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடுங்க!

Report Print Kabilan in ஆரோக்கியம்

மனித உடலில் மிகவும் முக்கியமான உறுப்பான கல்லீரலில் தொற்று ஏற்படாமல் இருக்க சில வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நமது உடலில் செரிமான சீராக நடைபெற, ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள என பல முக்கியமான பணிகளை கல்லீரல் செய்கிறது.

ஆனால், இந்த கல்லீரல் சரியாக செயல்படாமல் போனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்சனை உட்பட பல நோய்கள் உண்டாகும்.

எனவே, கல்லீரலில் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, சிலவகை உணவுகளை நாம் உட்கொண்டாலே போதும். அந்த உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

குறுக்கு வெட்டுக் காய்கறிகள்

குறுக்கு வெட்டுக் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்றவற்றில் அத்தியாவசிய பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான ப்ளேவோனாய்டுகள் உள்ளன.

இவை, கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்களாகும். இது புற்றுநோய் உண்டாக்கும் கார்சினோஜென்களின் உருவாக்கத்தைத் தடுக்க வல்லவை.

பச்சை இலைக் காய்கறிகள்

முட்டைக்கோஸ், பிரஸ்ஸல் முளைகளில் சல்பர் அதிகளவில் உள்ளது. இவை கல்லீரலை சுத்தம் செய்யவும், ப்ரீ-ராடிக்கல்களை நீக்கவும் உதவும்.

அடர் பச்சை இலைக் காய்கறிகள், கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து பித்த நீரை வெளியிட தூண்டிவிட்டு, செரிமானம் சீராக நடைபெறவும், கொழுப்புக்களை உறிஞ்சவும் செய்யும்.

எனவே, இந்த வகை காய்கறிகளை உணவில் அடிக்கடி தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்

முளைக்கட்டிய விதைகள் மற்றும் நட்ஸ்களில் உள்ள புரோட்டீன் மற்றும் நொதிகள், ஒரு வினையூக்கிகளாக செயல்பட்டு உடலின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும், இவை கல்லீரல் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுப்பதால் உணவாக இதனை உட்கொள்ள வேண்டும்.

பூண்டு

பூண்டுகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி-பாக்டீரியல் பண்புகள், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், கல்லீரலில் உள்ள குறிப்பிட்ட சில மோசமான வேதியல் மற்றும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

இதனால், கல்லீரல் சுத்தமடைவதால் தினமும் ஒரு பல் பூண்டையோ அல்லது சமையலில் பூண்டையும் சேர்த்து வர வேண்டும்.

திராட்சை

சிவப்பு திராட்சை கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள தாவர வகை சத்துக்கள், கல்லீரலில் அழற்சி ஏற்படுவதைக் குறைக்கிறது.

எனவே, கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள திராட்சையை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

காபி

காபி, கல்லீரலைப் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. கல்லீரல் பாதிப்பு மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களின் ஜூஸை குடித்து வந்தால், கல்லீரலில் தொற்றுகள் ஏற்படாமலும், அதன் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். வாரத்திற்கு 3 முறை பெர்ரிப் பழங்களை சாப்பிட, கல்லீரலுக்கு நன்மை பயக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் உள்ள வளமான அளவிலான ஆண்டி-ஆக்ஸிடண்ட மற்றும் நைட்ரேட்டுகள், கல்லீரலில் பாதிப்பு மற்றும் அழற்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

கல்லீரலில் உள்ள நொதிகளை சுத்தம் செய்யும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளதால், பீட்ரூட்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாகவோ சாப்பிடலாம்.

மீன்கள்

கானாங்கெளுத்தி, சால்மன் போன்றவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கல்லீரலில் அழற்சி ஏற்படுவதைக் குறைக்கும். கல்லீரலில் நொதிகளின் அளவை சரியான முறையில் பராமரிக்க இந்த மீன்கள் பயன்படுகின்றது.

மேலும், இவை கொழுப்புக்கள் தேங்குவதையும் தடுத்து, சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. தினமும், ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயிலைக் குடித்து வந்தால், கல்லீரலில் நொதிகளின் ஆரோக்கியம் மேம்படுத்துவதோடு, கொழுப்புக்கள் தேங்குவது தடுக்கப்படும்.

இதனால் கல்லீரலில் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். குடிப்பதற்கு பதிலாக சமையலிலும் பயன்படுத்தலாம்.

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் கல்லீரல் சுத்தம் செய்யப்பட்டு, ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும். மேலும், தமனிகளில் உள்ள அடைப்புகளைப் போக்குவதோடு, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும்.

முட்டை

முட்டையில் உள்ள புரோட்டீன், அமினோ அமிலங்கள் கல்லீரலை சுத்தம் செய்பவை. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கோலின் என்னும் நொதிப்பொருள், கல்லீரலைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கேரட்

கேரட்டில் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும் திறன் உள்ளது. எனவே, கேரட்டை ஜூஸாக, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு 2-3 முறைகள் பருகலாம். உணைவிலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, கல்லீரலில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, தினமும் ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸை பருக வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், அழற்சியை குறைக்க வல்லவை. எனவே, ஒருவர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers