வெற்றிலையின் மகத்துவங்கள்!!

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

நமது பாட்டியும் தாத்தாவும் காரணமில்லாமல் வெற்றிலைப் பாக்குப் போடுவதில்லை என்பது தெரியுமா?

ஒரு நல்ல விருந்தின் முடிவில் வெற்றிலைகள் வைக்கப்படுவது எதற்காக? காரணங்கள் இதுதான்

வெற்றிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. வயிற்றில் உள்ள வாயுவை இது நீக்குகிறது. ஜீரணக் கோளாறுகளை சரி செய்யக் கூடியது.

மூளை, இதயம், சிறுநீர் பை போன்றவற்றைத் தூண்டிவிடும். இதன் சாறு காயங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இத்தகைய தன்மை உள்ள வெற்றிலையை மூலிகை என்றுதான் சொல்ல வேண்டும்.

நல்ல மணமும் காரத்தன்மையும் கொண்ட வெற்றிலைகளைப் பயன்படுத்தி நாம் என்னென்ன உணவு தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

வெற்றிலை ரசம்

3 எண்ணிகையிலான வெற்றிலையை அதன் காம்புகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, இதனுடன் 2 பல் பூண்டு சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து தனியாக வைக்கவும்.

சாதாரண ரசம் தாளிப்பது போலவே ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் கடுகு பெருங்காயம் காய்ந்த மிளகாய் போட்டு, ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெற்றிலைக் கலவையை சேர்க்கவும். இதனுடன் கொஞ்சம் புளிக்கரைசல் மற்றும் ஒரு தக்காளியை நன்கு கரைத்து சேர்க்கவும்.

இதனை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. இந்த ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குறையும், ஜீரணம் ஆகும், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. இதயத்தை சமன் செய்யும் மேலும் ரத்த அழுத்தம் சமமாக இருக்கும்.

வெற்றிலைத் தேநீர்

வெற்றிலையைப் பயன்படுத்தி தேநீர் கூடத் தயாரிக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம். இனி தயாரிக்கும் முறையைப் பார்ப்போமா?

வழக்கமாகத் தேநீர் போடும் பாத்திரத்தில் 2 வெற்றிலைகள் மற்றும் 1 ஏலக்காய், 1 லவங்கம் மற்றும் சிறிது உலர்ந்த திராட்சையைத் தட்டி சேர்க்கவும்.

பின்னர் பனங்கல்கண்டு சேர்த்து 1 டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விட்டால் தேநீர் தயார். இதனை வடிகட்டி குடித்து வர நெஞ்சு சளி போன்றவை சரியாகும், ரத்தம் சுத்தமாகும், குடல் புண்கள் ஆறும், வயிறு சுத்தமாகும், பசியைத் தூண்டும், இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அருந்தலாம்.

வெற்றிலைக் களிம்பு

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை பிய்த்துப் போட்டு வெற்றிலைகளை வாட்டி ஆறவைக்கவும்.

வெற்றிலை இளஞ்சூடாக இருக்கும்போது நெஞ்சில் வைத்தால் நெஞ்சு சளி சரியாகும், தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.

சிறுநீரகம் ஈரல் மற்றும் நுரையீரலுக்கு பலம் தரும் வெற்றிலை, வாய்க்கு மணமும் பற்களுக்கு பலமும் கொடுக்கிறது, வயிற்றில் ஏற்படும் வாயுவைப் போக்குகிறது.

இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலையைப் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்