உங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா? அதனை எப்படி நிறுத்தலாம்?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம்மில் சிலருக்கு அடிக்கடி கண்கள் துடிப்பதுண்டு. இந்தத் துடிப்பு சில நொடிகள் மாத்திரமே நீடிக்கும்.

அதிலும் சிலர் இடக்கண் துடித்தால் நல்லது; வலக்கண் துடித்தால் அபசகுணம் போன்ற நம்பிக்கை எல்லோரிடமும் காணப்படும்.

உண்மையில் கண்கள் துடிப்பதற்கு இயற்கையாகவே பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதில் முக்கிய காரணமாக மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி என்பனவாகும்.

அந்தவகையில் இதனை எப்படி தடுத்து நிறுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

இதனை எப்படி நிறுத்தலாம்?
  • தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பதை, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.
  • கண்ணிமை துடிப்பதற்கு மதுபானம் காரணமாக அமையலாம். ஆகவே, மதுபானம் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.
  • தினமும் இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஐம்பது வயதை எட்டியவர்கள் கணினி திரையை அதிக நேரம் பார்ப்பது, குறிப்பிட்ட மருந்துகள் சாப்பிடுவது, கான்டாக்ட் லென்ஸ் அணிவது ஆகியவை கண்கள் வறட்சிக்கு காரணமாக அமைகின்றன. அவற்றை தவிர்க்கலாம்.
  • உடலில் நீர்ச்சத்து குறைவதால் கண்ணிமை துடிக்கக்கூடும். இதை தவிர்க்க முடிந்த அளவு அதிக நீர் பருக வேண்டும்.
  • மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும். சமச்சீர் உணவை உண்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.
  • கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம். இதனால் கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும். வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம். இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.
  • முடிந்த அளவு இறுக்கமாக கண்களை மூடி, பிறகு முடிந்த அளவு விரிவாக திறக்கவும். கண்ணீர் வருமளவுக்கு தொடர்ந்து இப்படி செய்யவேண்டும். இது கண்கள் மற்றும் முகத்தின் தசைகள் விரிவடையச் செய்வதோடு, கண்களுக்கு நீர்ச்சத்து கிடைக்குமாறும், இரத்த ஓட்டம் அதிகரிக்குமாறும் செய்யும். இதைச் செய்யும்போது கண்ணிமை துடிப்பு அதிகமானால் அல்லது வலி ஏற்பட்டால் நிறுத்திவிடவும்.
  • கண்களை ஒரு நிமிட நேரத்துக்கு மூடிக்கொள்ளவும். மூடியிருக்கும்போது முடிந்த அளவு கண்களை இறுக்கவும். பிறகு இமைகளை திறக்காமல் இறுக்கிய கண்களை தளரவிடவும். மூன்று முறை இப்படி செய்தபின்னர் கண்களை திறக்கலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்