குறட்டை விடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெரியுமா? அதை தடுக்க இதை மட்டும் செய்யுங்க போதும்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கினால் அவர் அருகில் படுத்திருப்பவர்களை அது தூங்க விடாமல் செய்துவிடும்.

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

காரணம் என்ன?

சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு.

புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.

குறட்டையால் ஏற்படும் ஆபத்து

குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.

அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.

ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.

இதோடு காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி ,இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

குறட்டையை தடுக்க

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும், மல்லாக்கப் படுக்க வேண்டாம், ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும், உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும், தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும், மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்