முற்பிறவி வினை தீர்க்கும் இலங்கை முன்னேஸ்வரம் திருக்கோவில்

Report Print Jayapradha in வரலாறு

முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது.

முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.

இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளன. தென்கிழக்கில் வேட்டைத் திருமடம் எனும் விநாயகர் ஆலயம், வடமேற்கில் ஐயனார் கோவில், வடக்கே காளி கோவில், தெற்கே களத்துப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளன.

முன்னேஸ்வரர் ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடன் விண்ணை நோக்கி கம்பீரமாய் நிற்கிறது. ஆலயத்தின் எதிரே தல விருட்சத்தின் அடியில் நாகர் சிலைகள் காணப்படுகின்றன.

ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என ஒருங்கே அமைந்துள்ளன. கருங்கற்களால் ஆன இவை, விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

கருவறை விமானம் 46 அடி உயரம் கொண்டது. மூன்று தளங்களைக் கொண்டு கண்டி மன்னனால் எழுப்பப்பட்டுள்ளது.

புறக்கோட்டங்களில் நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மன், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

ஆலயத்தின் நடுநாயகமாக முன்னேஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரில் பெரிய வடிவில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் இடதுபுறம் அன்னை வடிவாம்பிகையின் எழில் கொஞ்சும் உலாத் திருமேனி அமைந்துள்ளது.

கருவறை வெளியே தென்திசை நோக்கி, அன்னை வடிவாம்பிகை எளிய வடிவில் பெயருக்கு ஏற்றாற்போல் வடிவழகியாய் அருள் வழங்குகின்றாள்.

வடிவாம்பிகையின் உலோகத் திருமேனி பழமையானதாகவும், கலைநயம் கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் எதிரே ஸ்ரீசக்கர எந்திரம் அமைந்துள்ளது. இது சிவலிங்கத்திற்கு இடதுபுறம் அமைந்துள்ளது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

பூசைகளும் விழாக்களும்
முன்னை நாதப் பெருமானின் மகோற்சவம்

வேறெந்த ஆலயத்திலும் இல்லாதவாறு இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமஸ்கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும்.

மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

பிட்சாடணோற்சவம்

இறைவன் இரவலர் கோலம் பூண்டு, தாருகாவனத்து முனிவர்களின் அகங்காரத்தை அடக்கிய அருள் வண்ணத்தைச் சித்தரிக்கும் பொருட்டு பிட்சாடணோற்சவத் திருவிழா இடம்பெறுகின்றது.

வடிவாம்பிகை அம்பாளின் மகோற்சவம்

முன்னேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் மற்றொரு உற்சவமாகிய அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்