”மக்களுக்காகவே நான்”, ”சொன்னீங்களே செஞ்சீங்களா?” பஞ்ச் பேசும் அரசியல் தலைவர்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா
”மக்களுக்காகவே நான்”, ”சொன்னீங்களே செஞ்சீங்களா?” பஞ்ச் பேசும் அரசியல் தலைவர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துவரும் நிலையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் முக்கிய தலைவர்களின் பிரசாரத்தில் அடிக்கடி இடம்பெறும் முக்கிய சில வார்த்தைகள் குறித்த தொகுப்பு இது.

’மக்களுக்காகவே நான்’, ’ஒரு தாய்க்குத்தான் தெரியும்’

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது அனைத்து பிரசாரங்களிலும் இந்த முறை தவறாது இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள், ‘மக்களுக்காக நான், மக்களால் நான். சொல்வதைச் செய்வேன். சொல்லாததையும் செய்வேன். ஒரு தாய்க்கு தெரியும், பிள்ளைகளுக்கு என்ன தேவை’

’சொன்னீங்களே… செஞ்சீங்களா?’

இதேபோல், திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பிரசாரங்களில்,‘சொன்னீங்களே, செஞ்சீங்களா?' என மறக்காமல் கேட்டு வருகிறார். கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, ஜெயலலிதா செய்வீர்களா? செய்வீர்களா? எனக் கேட்டிருந்தார். எனவே, அதை வைத்தே திமுகவினர்,செஞ்சீங்களா? செஞ்சீங்களா? என பிரசாரங்களில் கேட்டு வருகின்றனர்.

’மாற்றம்… முன்னேற்றம்’

இம்முறை சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். எனவே, அன்புமணி ராமதாஸின் பிரசாரத்தில், ‘மாற்றம்... முன்னேற்றம்...' என்பது மறக்காமல் இடம் பெற்று வருகிறது. பாமகவினரும் அதனை வழிமொழிந்து வருகின்றனர்.

’தமிழகம் மலரட்டும்’

கடந்த தேர்தல்களில் மோடி அலையை முன்னிறுத்திய பாஜகவினர், இம்முறை தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும் என்றும், மாற்றத்திற்கான நேரம் இது என்றும் தொடர்ந்து பிரசார மேடைகளில் முழங்கி வருகின்றனர்.

’ஆறுமுகம்… ஏறுமுகம்…’

மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கினர். பின்னர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அது பாண்டவர் அணி எனப் பேர் பெற்றது.

பின்னர்அக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகாவும் சேர்ந்ததைத் தொடர்ந்து கூட்டணித் தலைவர்களின் எண்ணிக்கை ஆறு ஆனது. இதனால், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதற்கொண்டு அனைவரும் ‘இது ஆறுமுகம் கொண்ட கூட்டணி. எங்களுக்கு ஏறுமுகம்' தான் என மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதில் எந்த பஞ்ச் மக்களிடம் சென்று சேர்ந்தது என்பது தேர்தல் முடிவு வெளியாகும்போது தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments