பண மோசடி செய்யும் குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்க கோரி வழக்கு

Report Print Arbin Arbin in இந்தியா
பண மோசடி செய்யும் குற்றவாளியாக விஜய் மல்லையாவை அறிவிக்க கோரி வழக்கு

இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடனை பெற்றுவிட்டு திருப்பி கட்டாமல் பிரித்தானியாவுக்கு தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையாவை பண மோசடி செய்யும் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது கடவுச் சீட்டை பறிமுதல் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் முன்னரே கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி அவர் பிரித்தானியா தப்பி விட்டார்.

இந்தியாவுக்கு திரும்பி வந்து, அவர் தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கும் மறுத்து விட்டார். அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிடிஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக பிரகடனம் செய்யுமாறு கேட்டு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்ட தனி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை அந்த நீதிமன்றம் வரும் 13ம் திகதி பிறப்பிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவியல் வழக்குகளில் ஒருவர் மீது நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்து, அவர் தலைமறைவாகி விட்டாலோ, ஆணையை நிறைவேற்ற முடியாமல் தாமே ஒளித்துக்கொண்டு விட்டாலோ அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் பிரகடனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments