ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Report Print Maru Maru in இந்தியா
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் கட்டண விவரம் மற்றும் ஹெல்ப்லைன் போன் நம்பரை பயணிகள் கண்ணில் எளிதில் படும் இடத்தில் எழுதிவைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் தாங்கள் வெச்சது தான் சட்டம் என்பதுபோல, முறைப்படுத்தப்பட்ட விதியை மீறி, அதிர்ச்சி ஏற்படுத்தும் அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்புகள் இல்லாத நிலையில் நடத்துனர்களிடம் நியாயம் கேட்க முடியாமல், கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டு, இதற்கு காரணமான நாட்டின் சீர்கேடுகளை நினைத்து மனதுக்குள் குமுறிக்கொண்டு பயணிக்கின்றனர்.

உணர்ச்சிவசப்படும் சிலர் பேருந்திலே நடத்துனரோடு சண்டையிட்டாலும் ’இஷ்டமிருந்தால் டிக்கெட் எடு இல்லையேல் பஸ்சை விட்டு கேழே இறங்கு’ என்ற தடாலடியான பேச்சால், கொஞ்ச தூரம் வந்த பிறகு, இறங்க மனமில்லாமல் வயிற்றெரிச்சலோடு அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுத்துவிட்டு ஆற்றாமையோடு பயணம் செய்கின்றனர்.

பொதுநல ஆர்வலர் வழக்கு

சீர்கேடுகள் இருக்கும் இடத்தில், அதை திருத்த முற்படும் பொதுநல ஆர்வலர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

அப்படி ஒருவராக வழக்கறிஞர் ஆர்.கோபிகா உயர் நீதிமன்றத்தில், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ‘ ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க மேற்கண்ட பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கண்களில் எளிதல் படக்கூடிய பொது இடங்களில் பேருந்து கட்டணத்தை எழுதிவைக்க வேண்டும்.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை கண்டுபிடிக்க, காவல் அதிகாரிகள், சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட சிறப்பு அதிரடிப்படையை ஏற்படுத்த வேண்டும்.

கூடுதல் கட்டணம் வசூலித்தல் உட்பட்ட பயணிகளின் குறைகளை தெரிவிக்க வசதியாக ஹெல்ப்லைன் மற்றும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவும் ஆம்னி பஸ்களில் அதற்கான கட்டண விவரங்களை பயணிகள் கண்ணில் படும்படி எழுதிவைப்பது கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

குறைகள் இருந்தால் அது பற்றி தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்ணையும் பேருந்தில் பயணிகள் கண்ணில் படக்கூடிய இடத்தில் எழுதி வைக்க வேண்டும்.

இதற்கான அரசாணையை ஒரு மாதத்தில் அரசு பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

அரசு பேருந்திலும் அவதி

தனியார் பேருந்துகளில் மட்டுமல்ல, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளிலும் வயது வரம்புக்கு உட்பட்டவர்களுக்கு அரை டிக்கட் வழங்காமலும் அவர்களுக்கு தனியாக சீட் கொடுக்காமலும் பயணிகளோடு நடத்துனர் சண்டையிடுகின்றனர்.

சில பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி கால்களுக்கு கீழே படுக்க வைத்து முறையாக பயணம் செய்யும் பயணிகளை தொந்தரவு செய்கிறார்கள்.

விதி ஒன்றிருக்க நடத்துனர்கள் அதைமீறி, அரசுக்கு அதிக பணம் வசூலித்து கொடுப்பதாக நினைத்து, நீண்ட தூரம் இரவுப் பயணம் செய்பவர்களை துன்புறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments