புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

Report Print Fathima Fathima in இந்தியா
புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா, தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

' இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து வருகிறது இறந்து போனவரின் குடும்பம்' என வேதனைப்படுகின்றனர் திருவான்மியூர் பகுதி மக்கள்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா.

இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார். 'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்திருக்கிறார்.

மறுநாள் அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை ஓட்டுக் கொண்டு வந்தவர், முனுசாமி என்ற தொழிலாளி மீது காரை மோதியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகிவிட்டார்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில், முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி.

அந்தக் குடும்பமே முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.

முனுசாமியின் நண்பர் நாராயணனிடம் பேசினோம். " முனுசாமி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம் கிடைச்சாலும், ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருப்பார். கார்பெண்ட்டர் வேலை, லோடு தூக்குவது என தினமும் 500 ரூபாய்க்கு மேல் வருமானத்தைப் பார்த்துடுவார்.

தெருவுக்குள் அவர் இருக்கும் இடமே தெரியாது. அவர் செத்துப் போனதுக்குப் பிறகுதான், ஊர்ல பல பேருக்கு அவரைத் தெரியுது. இரண்டு குழந்தைகளை வச்சுட்டு முனுசாமி குடும்பமே கஷ்டப்படுது. இதுவரைக்கும் யாரும் வந்து பாக்கலை. குடிச்சுட்டு வண்டி ஓட்டுன பொண்ணு மேல, கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. அது ஒண்ணு மட்டும்தான் ஆறுதலா இருக்கு.

இறந்துபோன அன்னைக்கு இறுதிக் காரியம் செய்வதற்குக்கூட அந்தக் குடும்பத்திடம் பணம் இல்லை. சம்பவம் நடந்த அன்னைக்கு 140 கிலோமீட்டர் வேகத்துல அந்தப் பொண்ணு வண்டி ஓட்டிட்டு வந்திருக்கு. இவர் பிளாட்பாரத்துலதான் நின்னுக்கிட்டு இருந்தார்.

இந்த மாதிரி பொண்ணுங்க, பையன்களுக்கு வாரக் கடைசின்னா இதே வேலையா போயிடுச்சு. அவர் இறந்துட்டதால, அவரோட மனைவி மூணு மாசத்துக்கு எங்கேயும் வேலைக்குப் போக முடியாது. ஏதாவது இழப்பீடு கொடுத்தாதான், அந்தக் குடும்பம் கரை சேரும்" என்றார் வேதனையோடு.

கிண்டி போக்குவரத்துக் காவலர்களிடம் பேசியபோது, " அன்றைக்கு ஐஸ்வர்யா, சுஷ்மா உள்ளிட்ட மூன்று பெண்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டியுள்ளனர். இதில், தொழிலதிபரின் மகள்தான் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

வார இறுதியில் குடிப்பதும் சினிமாவுக்குப் போவதும்தான் இவர்களுடைய பொழுதுபோக்கு. வாகனத்தை ஓட்டிய ஐஸ்வர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடப்பது அப்பகுதி மக்களுக்கு தினம்தினம் பெரும் துன்பமாகவே முடிகிறது. பணம் படைத்தவர்கள் ஏற்படுத்தும் மரணம் என்பது, அந்த நேரத்தின் ஒரு செய்தியாக மட்டுமே மாறிப் போவது வேதனையான விஷயம்.

ஐஸ்வர்யா போன்ற செல்வந்தர் வீட்டுப் பெண்களின் வழக்குகள், சல்மான் கானின் வழக்கு போல மாறிவிடக் கூடாது என அச்சப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments