ஆசிரியர் சேரில் அமர்ந்த 3வது வகுப்பு மாணவன்: பிரம்பால் அடித்து வெளுத்த பள்ளி நிறுவனர்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னையில் ஆசிரியரின் சேரில் அமர்ந்து ஷூ லேஸை சரி செய்த மாணவனை அந்த பள்ளியின் தாளாளர் சிறுவனென்றும் பாராமல் பிரம்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளி 5வது குறுக்குத் தெருவில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் குரு விக்னேஷ் என்ற 8 வயது சிறுவன் 3வது வகுப்பு படித்து வருகிறான்.

சம்பவத்தன்று மதியம் வகுப்பறையில் இருந்தபோது மாணவனின் ஷூ லேஸ் கழன்று விட்டது. உடனடியாக அதை சரி செய்ய முயன்றபோது குனிய முடியாமல் சிரமமாக இருந்துள்ளது.

அப்போது ஆசிரியை இல்லை. இதனால் அவரது இருக்கையில் போய் அமர்ந்து குனிந்து ஷூ லேஸை சரி செய்துள்ளான் குரு விக்னேஷ். அந்த நேரத்தில் ஆசிரியை மது அங்கு வந்துள்ளார். தனது சேரில் மாணவன் இருப்பதைப் பார்த்து கோபமடைந்த அவர் குரு விக்னேஷை பள்ளி தாளாளரிடம் கூட்டிச் சென்றுள்ளார்.

தாளாளர் சிவராஜ் நடந்தை சம்பவத்தை கேட்டறிந்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த பிரம்பை எடுத்து சிறுவனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் குரு விக்னேஷ் அலறித் துடித்தான். உடம்பில் சில இடங்களில் வீக்கமும் ஏற்பட்டு விட்டது.

மாலையில் பள்ளி முடிந்து அழைத்துப் போக அவனது தாயார் பத்மா வந்தபோது ஓடிப் போய் தனது தாயைக் கட்டிப்பிடித்து நடந்தைதக் கூறி கதறி அழுதுள்ளான் குரு விக்னேஷ்.

உடனியாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு மகனுடன் சென்ற அவர் பள்ளி தாளாளர் மீது புகார் கொடுத்துள்ளார். பொலிசார் உடனடியாக தாளார் சிவராஜை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அனுப்பி வைத்து விட்டனர். பத்மாவிடமும், இனிமேல் இதுபோல நடக்காது என்று கூறியுள்ளனர். இதையடுத்து பத்மா வீடு திரும்பினார்.

ஆனால் அடுத்த நாள் காலை குரு விக்னேஷை பள்ளியில் விட பத்மா சென்றபோது அங்கு நின்றிருந்த தாளாளர் சிவராஜ், இருவரையும் திட்டியுள்ளார். பத்மாவையும் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பத்மாவும் மற்ற மாணவர்களின் பெற்றோரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பொலிசார் சிவராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பெற்றோர்கள் சமாதானமடைந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து பத்மா கூறுகையில், அப்படித் தான் செய்வேன், உன்னால் முடிந்ததை பார் என்று என்னிடம் பள்ளி நிறுவனர் சிவராஜ் சவால் விடுகிறார்.

சம்பவம் நடந்த அன்றே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக பொலிசார் செயல்பட்டு, சிவராஜ் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர்.

பள்ளி நிறுவனர் ஷிவராஜ் மீது பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். இனியாவது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments