குஜராத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் gau rakshaks அல்லது மாடு கண்காணிப்பாளர்கள் அமைப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 29 வயது நிரம்பிய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமது அய்யூப் என்ற முஸ்லிம் இளைஞரே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முகமது அய்யூப், சமீர் ஷேக் இருவரும் மாடு, கன்றுக்குட்டியை கடத்திச்சென்ற போது ஒரு அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொலிசார் கூறுகையில், அய்யூப் கடத்திச்செல்லும் போது நெடுஞ்சாலையில் அவரது கார் விபத்துக்குள்ளானது, இதில் கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த அய்யூப் சம்பவயிடத்தை விட்ட தப்பிசெல்ல முயன்றுள்ளார். ஆனால், ஒரு கும்பல் அவரை துரத்தி பிடித்து தாக்கியுள்ளது.
சம்பவத்தின் போது அய்யூப்புடன் இருந்த சமீர் ஷேக் பொலிசாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பின்னர், gau rakshaks அமைப்பை சேர்ந்த மூன்று பேர் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியதாக அய்யூப் மற்றும் ஷேக் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், புகார் அளித்த மூன்று பேர் தான் அய்யூப்பை தாக்கியதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் சம்பவயிடத்தில் இருந்ததிற்கான எந்த ஆதாரமும் இல்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஷேக், அவர்களை அடையாளம் காட்டவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், பொலிசாரின் வற்புறுத்தலினால் தான் ஷேக் அடையாளம் காட்ட மறுத்துள்ளதாக அய்யூப் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புகார் அளித்ததின் மூலம் அவர்கள் சம்பவயிடத்தில் இருந்தது உறுதியாகியுள்ளது என அய்யூப்பின் உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்,சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அய்யூப்பை தாக்கிய கும்பல் குறித்து தீவர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.