உண்மையான ஆட்டத்தை ஆரம்பிப்பேன்! சசிகலா புஷ்பா சவால் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா
501Shares

வழக்கு நெருக்கடி -கட்சித் தலைமையின் கோபம் -தொடரும் புகார்கள் இவற்றிற்கிடையிலும் அசராமல் இருக்கிறார், ராஜ்யசபாவில் ஜெ. மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய சசிகலா புஷ்பா எம்.பி.! டெல்லியில் இருக்கும் அவரை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்...

உங்களின் முன்ஜாமீன் மனு ரத்தாகியிருக்கும் சூழலில், உங்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. "கைது செய்யப்படுவோம்' என்கிற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?

தவறு செய்பவர்களே சுதந்திரமாக, அதிகார தொனியில் நடமாடும்போது எந்தத் தவறும் செய்யாத நான் எதுக்கு பயப்படணும்? நம்முடைய ஜுடிசியல் சிஸ்டமும் டெமாக்ரசியும் வலிமையாக இருக்கும்போது, தனிப்பட்ட ஒரு முதலமைச்சருக்கோ (ஜெயலலிதா) அரசாங்கத்துக்கோ பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. அவகாசம் முடிந்தாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று என் தரப்பு நியாயத்தைச் சொல்லி ஜாமீன் பெறுவேன். கைது செய்து மிரட்டுவதெல்லாம் என்கிட்டே நடக்காது.

உங்களிடம் பணிபுரிந்த 2 பெண்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர வைக்கிறதே?

புகார் கொடுக்க வந்த அந்த பெண்களை கவனியுங்கள். எந்தளவுக்கு அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்பது அவர்களின் முகமே காட்டிக் கொடுக்கிறது. அப்பாவிப் பெண்களை எனக்கு எதிராக மிரட்டி, பயமுறுத்தி புகார் சொல்ல வைப்பதுதான் ஒரு முதல்வரின் வேலையா? இப்படி மிரட்டி புகார் சொல்ல வைப்பவர்கள் மீது ஒரு வழக்குப் போடணும். அப்போதுதான் அதிகாரத்திலிருப்பவர்கள் திருந்துவார்கள்; அப்பாவிப் பெண்களும் காப்பாற்றப்படுவார்கள்.

மிரட்டலுக்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என நீங்கள் சொல்ல வருவது நம்பும்படியாக இல்லையே?

நேரடியாக முதல்வர்தான் மிரட்டினார்னு நான் சொல்ல வரவில்லை. ஆனா, அவருக்குத் தெரியாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்காது என்றுதான் சொல்லுகிறேன். ஒரு எம்.பி. மீது புகார் சொல்லப்படுகிற நிலையில், தமிழக போலீஸ் உடனடியா எஃப்.ஐ.ஆர். போடாது. தங்களுடைய மேலதிகாரிகளுக்குச் சொல்வார்கள். அவர்கள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போவார்கள். முதல்வர் க்ரீன் சிக்னல் தந்தால்தான் வழக்குப் பதிவாகும். பொய் வழக்குகளைப் போடுவதை விட்டுவிட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தினால் மக்கள் நிம்மதியடைவார்கள்.

உங்களைத் தொடர்ந்து தென்மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் ஜெயலலிதா. உங்களின் நட்பு வட்டத்தில் இருந்ததனால்தான் அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது என சொல்லப் படுகிறதே?

என்னை ஒழிக்க என் அரசியல் எதிரிகள் எப்படி தீயா வேலை செஞ்சாங்களோ அப்படித்தான் அவர்கள் விசயத்திலும் நடந்திருக்கும்னு நான் நினைக்கிறேன். என் மீதும் கட்சிக்காரர்கள் மீதும் வரும் புகார்களை நேர்மையாக முதல்வர் விசாரித்திருந்தால் அடிக்கடி கட்சியிலிருந்து பலரும் நீக்கப்படும் நிலை உருவாகாமல் இருக்கும்.

அப்படியானால் கட்சிக்காரர்கள் மீது வரும் புகார்களை விசாரித்தறிய முடியாத ஒரு சூழலில் கட்சித் தலைவரான ஜெயலலிதா சிக்கியிருக் கிறாரா?

அதுதான் உண்மை. அ.தி.மு.க. மகளிர்அணிச் செயலாளர் பதவியிலிருந்து என்னை எடுத்த பிறகு, ஃபோட்டோக்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். மிரட்டல்கள் எனக்கு நிறைய வந்தன. பேரம் நடத்தினாங்க. மிரட்டியவர்களைப் பற்றிய விபரங்களோடு என் கணவரை அழைச்சிக்கிட்டு கார்டனுக்குப் போனேன். "அம்மாவைப் பார்க்க முடியாது'ன்னு பூங்குன்றன்தான் புகாரை வாங்கினார். துணை ஜனாதிபதியை பார்க்கணும்னு நான் அவரது அலுவலகத்துக்குப் போறேன். சந்திக்கிறேன். இந்தியாவுல யாரை வேணும் னாலும் சந்தித்துப் பேச முடிகிறது. ஆனா, இங்கு முதல்வரை பார்க்கவே முடிவதில்லை. கார்டனில் கொடுக்கப்படும் புகார்கள் அவரது கவனத்துக்குப் போறதே இல்லை.

அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களாலேயே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லைன்னா ஜெயலலிதா யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் ?

சசிகலா மற்றும் அவரது சமூகம் சார்ந்தவர்களால் தடுக்கப்படுகிறார் முதல்வர். அவரை பார்க்கமுடியாத அளவுக்கு அவர்களது ஆதிக்கத்தில்தான் இருக்கிறார். புதுசு புதுசா நிர்வாகிகளை நியமிக்கிறாங்களே, அவங்களைப் போய் முதல்வரைப் பார்த்து பேசிட்டு வரச்சொல்லுங்க பார்ப்போம், முடியாது.

அப்படியானால் சசிகலாவின் தலைமையில்தான் அ.தி.மு.க. இயங்குகிறதா?

இதிலென்ன உங்களுக்கு சந்தேகம்? மாநிலத்தின் உளவுத்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தானே இருக்கு. அவங்ககிட்டே முதல்வர் நேர்மையான ரிப்போர்ட் வாங்கிப் படிக்கட்டும். அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், தூத்துக்குடி செல்லப்பாண்டியன் உட்பட ரிப்போர்ட் கேட்கச்சொல்லுங்க. யார் காலில் விழுந்து அழுது பதவி வாங்கினாங்கன்னு தெரியும். சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சொல்றபடிதான் எல்லாமே நடக்குது. அப்படிப்பட்ட சூழல்ல, இவங்களை நம்பி தொண்டர்கள் எப்படி நிக்க முடியும்? நேர்மையா விசாரிச்சாங்கன்னா கட்சி எந்த நோக்கத்திற்காக யார் பின்னால போகுதுங்கிறது புரியும்.

உங்களுக்குக் கிடைத்த பதவியும் சசிகலாவின் தயவால் கிடைத்ததுதானா?

முதல்வரை சுத்தி 15 அதிகார மையம் இருக்கு. ஒருத்தர் வீட்டுலயும் நான் கால் வைத்தது கிடையாது. என் உழைப்பால் கிடைச்ச பதவி இது. அதிகார மையங்களைப் பார்த்தாதான் பதவி கிடைக்கும்னா தொண்டர்களுக்கு அதுதான் தண்டனையா? திருட்டு வழியில போய் இருட்டுல சிலரை சந்திச்சாதான் வேலை நடக்குது.

உங்களுக்கு எம்.பி. பதவியைக் கொடுத்த ஜெயலலிதாவே, பதவியை ராஜினாமா செய் என உத்தரவிட்டும் நீங்கள் செய்யாதது கட்சித் தலைமைக்கு செய்யும் துரோகமில்லையா?

நான் எதுக்கு மனசாட்சிக்கு விரோதமா நடந்துக்கணும்? என்னுடைய உழைப்புக்காக கொடுக்கப்பட்ட பதவியை நான் எதுக்கு இழக்கணும்? சசிகலா மாதிரி சிலர் இருக்காங்க. வீட்டை விட்டு போன்னு சொன்னா போய்டுவாங்க. அப்புறம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துட்டு வந்துடுவாங்க. அதை நாங்க பண்ண முடியாது. தலைமையை விட அந்த கட்சிக்கு நான் நிறைய உழைச்சிருக்கேன். அதனால துரோகம் பண்ணிட்டேன்னு யாரும் என்னை குற்றம்சாட்ட முடி யாது. நம்பி வந்தவங்களுக்கு துரோகம் செய்றது அவங் களுக்குத்தான் பழக்கம். சட்டமன்றத்துல அவங்களை (ஜெ.) அவமானப்படுத்திய வீரபாண்டி ஆறுமுகத்தை அடித்து மூக்கை உடைத்த தாமரைக்கனியையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து கேவலப் படுத்தி அனுப்பியது, சாத்தான்குளம் மற்றும் சைதாப்பேட்டை இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்த வெங்கடேசப்பண்ணையாரை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது என துரோகம் செய்தது அவங்கதான்.

அ.தி.மு.க.வில் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் ஒரு இறுக்கமான சூழல் இருப்பதாகச் சொல்கிறார்களே?

கட்சிக்காக உழைச்சவங்களை ஓரங்கட்டிவிட்டு, "பேக்கேஜ் பேசிஸ்'ல கட்சியை நடத்துனா தொண்டர்கள் இறுக்கமாகத்தான் இருப்பாங்க. கட்சியில 80 சதவீதம் பேர் சசிகலா வகையறாக்களைப் பிடிச்சி உள்ளே வந்துடுறாங்க. நேர்மையா உள்ளே வர்றவங்களால முதல்வரை அணுக முடியலை. பல விதமான குடைச்சல்கள். ஓ.பி.எஸ். அண்ணாச்சி இருக்கார். அவர் மீது கோபம் வந்தது. ஓரங்கட்டினாங்க. ஆனா, டக்குன்னு பிடிக்க வேண்டியவங்கள பிடிச்சாரு மீண்டும் பெரிய ஆளாயிட்டாரு. நத்தம் விஸ்வநாதனை வெளியேத்துறாங்க. அப்புறம் முக்கியத்துவம் கிடைக்கும். குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு. சசிகலா வகையறாக்களின் ஊழல்கள், அரசியல் தலையீடுகள் நிறைய இருக்கு. முதல்வர் இதை ரிவியூ பண்ணணும்.

ஆளுங்கட்சியில் அதிருப்தியாக உள்ள எம்.எல்.ஏ.க்களை வைத்து அ.தி.மு.க.வை உடைக்க திட்டமிடுகிறீர்களாமே?

உடையுமா? உடைக்கப்படுமாங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த வேலையும் எனக்கு தெரியாது. ஆனா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நிறைய அதிருப்திகள் இருக்கு. அப்படிப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னிடம் பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க. கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வரும்போது, அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு வந்துட்டா சின்னம்மா கும்பலிடம் கட்சி போய்டுமே, அப்படிப்போனா அவ்வளவுதான்னு ஆதங்கத்துல நிறைய பேர் இருக்காங்க. அதனால, பொறுத்திருந்து பாருங்க, வரலாறு பேசும்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை. ஆனா, உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த துணிச்சலுக்கு காரணம், தி.மு.க. எம்.பி. கனிமொழியும், தொழிலதிபர் வைகுண்டராஜனும் கொடுத்து வரும் ஆதரவும், பா.ஜ.க. தலைவர்களின் ஒத்துழைப்பும்தான் என்று சொல்லப்படுகிறதே?

வைகுண்டராஜன் ஒரு தொழிலதிபர். அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. கனிமொழி, தி.மு.க. என்கிற ஒரு பெரிய இயக்கத்தின் மகளிர் அணிச்செயலாளர். அந்த கட்சியின் எம்.பி.யாகவும் இருக்கிறார். அவர்களுக்கும் அரசியல் ரீதியாக ஏகப் பட்ட பணிகள் இருக்கு. அப்படிப்பட்ட நிலையில், என்னை இயக்க வேண்டிய அவசியம் அவங்களுக்கு எதுக்கு? எனக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் பலரும் உண்மையைக் கேட்டிருக்காங்க. இன்னும் சொல்லாத பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன. அதையெல்லாம் போட்டுடைக்கும்போதுதான் என்னுடைய உண்மையான ஆட்டம் ஆரம்பமாகும். அதை சம்பந்தப்பட்டவர்களால் தாங்கமுடியாது!

- Nakkheeran

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments