உறவுக்கு மனைவி மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து: டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

மனைவி நீண்டகாலம் உறவுக்கு மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு அரியானா மாநிலத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியரின் வாழ்க்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புயல் வீசத் தொடங்கியது.

கணவன்-மனைவிக்கு இடையே உறவு விஷயத்தில் பிரச்னை முளைத்தது. மனைவியை உறவுக்கு அழைத்தால் அவர் இணங்காமல் மறுத்து ஒதுங்கினார். இதனால் கணவர் மிகுந்த மன பாதிப்புக்கும், உளைச்சலுக்கும் ஆளானார்.

இப்படியே 4 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மட்டுமின்றி மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டும் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், நான் உறவுக்கு அழைத்தால் மனைவி மறுக்கிறார். இத்தனைக்கும் நாங்கள் ஒரே வீட்டில் ஒரே அறையில்தான் வசித்து வருகிறோம்.

மேலும் அவர் வீட்டு வேலைகளையும் செய்வதில்லை. இதனால் எங்கள் குடும்பத்தில் நான் உள்பட எனது பெற்றோரும் மிகுந்த துயரம் அடைந்துள்ளோம். இதையடுத்து, மனைவிக்கு எங்களது வீட்டில் தனியாக ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தோம்.

கடந்த 4 ஆண்டுகளாக என்னுடன் உறவு கொள்ள மனைவி மறுத்து வருகிறார். அவர் உடல் ரீதியாக எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.

அப்படி இருந்தும் என்னை உறவு கொள்வதற்கு அவர் அனுமதிப்பது கிடையாது. இதனால் மிகுந்த மன பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே எனக்கு மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து வழங்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனைவி எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்தார். அதில் தனது கணவர் கூறி இருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

இதையடுத்து, 1955-ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின்படி மன பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை கணவர் சரிவர நிரூபிக்கவில்லை என்று கூறியும், மனைவியின் வேண்டுகோளை ஏற்றும் விவாகரத்து வழங்காமல் கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் கடந்த மார்ச் மாதம் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அளித்த பரபரப்பு தீர்ப்பில், ஒரே வீட்டில் கணவன்- மனைவி ஒன்றாக வசித்து வந்தாலும், மனைவி நீண்டகாலம் தாம்பத்ய உறவுக்கு மறுத்து வந்து இருக்கிறார்.

இத்தனைக்கும் மனைவிக்கு எந்த உடல்கோளாறும் கிடையாது. அப்படி இருந்தும் தாம்பத்ய உறவுக்கு அவர் மறுத்து இருக்கிறார். இதனால் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகி உள்ளார். இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

நீண்ட காலம் தாம்பத்ய உறவுக்கு மறுத்ததால் அது வாழ்க்கைத் துணைக்கு மிகுந்த மன வேதனையையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, இந்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது.

தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்ததை அடிப்படையாக கொண்டு இந்த தம்பதியரின் திருமணத்தை கோர்ட்டு ரத்து செய்கிறது. மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து அளித்து கோர்ட்டு உத்தரவிடுகிறது என நீதிபதிகள் குறித்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments