தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதுபான கடைகளை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசையை முதல்வர் ஓ.பி.எஸ் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் ஆவல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான விமர்சனங்களில் ஒன்று, மதுவிலக்கை அமல் படுத்துவதில் அவர் ஈடுபாடு காட்டவில்லை என்பது தான்.
ஆனால் மதுவுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், அரசு நிதி நிலையை உத்தேசித்தே முழு மதுவிலக்கை அமல்படுத்த இயலாமல் இருந்தார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்வது, "நீங்க நல்லா இருக்கணும்" என்ற திரைப்படத்தைத்தான்.
இது குறித்து அதிமுக பிரமுகர்கள் கூறுவது, "1991ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழக அரசின் நிதி உதவியுடன் "நீங்க நல்லா இருக்கணும்" என்ற திரைப்படத்தை உருவாக்கினார்.
மதுவின் கொடுமையை விளக்கும் சமூக சீர்திருத்தப்படமாக இது உருவானது. 1992ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படத்தை, விசு இயக்கியிருந்தார். நிழல்கள் ரவி, பானுப்ரியா, மனோரமா, சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.
மதுவினால் உண்டாகும் தீமைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.
இந்தத் திரைப்படத்தில் முதல்வராகவே தோன்றிய ஜெயலலிதா, மதுவின் தீமையை விளக்கி சிறப்பாக உரையாற்றியிருந்தார்.
இதிலிருந்தே மதுவுக்கு எதிரான அவரது மனநிலை புரியும். இறுதிக்காலத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதன் ஆரம்பமாக, மதுக்கடை திறக்கும் நேரத்தை காலை பத்து மணியில் இருந்து 12 மணிக்கு மாற்றினார்.
ஜெயலலிதாவின் இறுதி ஆசை முழு மதுவிலக்குதான். அவரது இறுதி ஆசையை, தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவேற்ற வேண்டும்!" என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள்.
நிறைவேற்றுவாரா புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்?